MI vs KKR | ஸ்டார்க் அபார பந்துவீச்சு: வான்கடேவில் மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா!

By செய்திப்பிரிவு

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் 51-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இதில் 24 ரன்களில் வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.

மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த கொல்கத்தா, 19.5 ஓவர்களில் 169 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

6.1 ஓவர்களில் 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது கொல்கத்தா. இருந்தும் வெங்கடேஷ் ஐயர் மற்றும் மணீஷ் பாண்டே இணைந்து 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். வெங்கடேஷ் ஐயர், 70 ரன்கள் எடுத்தார். மணீஷ், 42 ரன்கள் எடுத்திருந்தார்.

170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி விரட்டியது. பனிப்பொழிவு காரணமாக இந்த இலக்கை மும்பை அணி சுலபமாக எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொல்கத்தா அணி வீரர்கள் தங்களது வலுவான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினர். மும்பை இந்தியன்ஸ் சார்பில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடி இருந்தார். அவர் 56 ரன்கள் எடுத்திருந்தார். டிம் டேவிட், 24 ரன்கள் எடுத்தார்.

மும்பை அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இஷான் கிஷன், நமன் திர், ரோகித் சர்மா, திலக் வர்மா, நேஹல் வதேரா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், பியூஷ் சாவ்லா, ஜெரால்டு கோட்ஸி என 18.5 ஓவர்களில் 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது மும்பை. இதன் மூலம் கொல்கத்தா 24 ரன்களில் வெற்றி பெற்றது.

மிட்செல் ஸ்டார்க் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் மற்றும் ரஸல் என மூவரும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். கடைசியாக கடந்த 2012 சீசனில் வான்கடேவில் மும்பையை வென்றது கொல்கத்தா. அதன் பிறகு சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் வான்கடேவில் மும்பையை வீழ்த்தி உள்ளது. ஆட்ட நாயகன் விருதை வெங்கடேஷ் ஐயர் வென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE