டி20 உலகக் கோப்பைக்கு பாண்டியாவை தேர்வு செய்தது ஏன்? - அஜித் அகர்கர் விளக்கம்

By செய்திப்பிரிவு

மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

அவரது தலைமைப் பண்பு ஒருபுறம் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் ஆல்ரவுண்டராக அவர் தனது திறனை வெளிப்படுத்தாதது மும்பை அணியின் ஒட்டுமொத்த செயல் திறனையும் வெகுவாக பாதித்துள்ளதாக முன்னாள் வீரர்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டதோடு அல்லாமல் துணைகேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பல்வேறு தரப்பினரை ஆச்சரியம் அடையச் செய்துள்ளது.

ஹர்திக் பாண்டியா கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் வங்கதேசஅணிக்கு எதிராக விளையாடியிருந்தார். அந்த ஆட்டத்தில் காயம் அடைந்து தொடரில் இருந்து வெளியேறிய அவர், அதன் பின்னர் சர்வதேச போட்டிகளில் களமிறங்கவில்லை. காயம் குணமடைந்த நிலையில் ஐபிஎல் தொடரில் தற்போது ஹர்திக் பாண்டியா விளையாடி வருகிறார்.

இந்நிலையில் மும்பையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியதாவது:

உலகக் கோப்பை அணித் தேர்வின் போது துணை கேப்டன் பதவி குறித்து எதுவும் பேசப்படவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா பங்கேற்றுள்ளார். டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் ஆட்டத்திற்கு இன்னும் ஒரு மாதம் உள்ளது. அவர் உடற்தகுதியுடன் இருக்கும் வரை, அவர் மேற்கொள்ள வேண்டிய பணியை செய்யக்கூடிய மாற்று வீரர் யாரும் இல்லை.

ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீண்டு நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்துள்ளார். அவர், தனது பணியை மேற்கொள்வார் என்று நம்புகிறோம். ஹர்திக் பாண்டியா பந்து வீசும் விதம் அணிக்கு சமநிலையை கொடுக்கும் மற்றும் சில விருப்பத் தேர்வுகளையும் வழங்கும்.

கே.எல்.ராகுலும் அற்புதமான வீரர். இதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் நாங்கள் நடுவரிசையில் பேட்டிங் செய்யக்கூடிய வீரர்களை தேடிக்கொண்டிருந்தோம். டி20 போட்டிகளில் கே.எல்.ராகுல் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்யக்கூடியவர். இந்த வகையில் சஞ்சு சாம்சன் நடுவரிசையில் சிறப்பாக விளையாடும் திறமையை கொண்டிருப்பதாக உணர்கிறோம். ரிஷப் பந்த் 5-வது வீரராக களமிறங்கக்கூடியவர். இவர்கள் இருவருமே அற்புதமான வீரர்கள்.

ரிங்கு சிங்கை 15 பேர் கொண்ட இறுதிப் பட்டியலில் இருந்து விலக்குவது கடினமான முடிவாகவே இருந்தது. ஷுப்மன் கில்லும் அதே நிலையைசந்தித்தார். ரோஹித் சர்மாவுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்குவதற்காகவே சில சுழற்பந்து வீச்சாளர்கள்அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளனர். 15 பேர் கொண்ட அணியில் இடம் பெறமுடியாதது ரிங்கு சிங்கின் தவறுஇல்லை. கூடுதலாக பந்து வீச்சாளர்தேவை என்பதால் இந்த முடிவை எடுத்தோம். இவ்வாறு அகர்கர் கூறினார்.

நிச்சயம் 4 ஸ்பின்னர்கள் தேவை: ரோகித் சர்மா: டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் சுழற்பந்து வீச்சாளர்களில் குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோர் ரிஸ்ட் ஸ்பின்னர்களாவும் ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாகவும் உள்ளனர்.

இந்நிலையில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, “இது குறித்து நான் விரிவாகப் பேச விரும்பவில்லை. எனக்கு கண்டிப்பாக 4 சுழற்பந்து வீச்சாளர்கள் தேவை.

நாங்கள் அங்கு நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளோம். போட்டி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் தொழில்நுட்ப அம்சம் உள்ளது. 4 சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ததற்கான காரணத்தை நான் இப்போது வெளிப்படுத்த மாட்டேன். சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களுக்கு தேவை.

அவர்களில் இருவர் ஆல்ரவுண்டர்கள் மற்றும் இரண்டு பேர் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ளக் கூடியவர்கள். இது அணிக்கு சமநிலையை அளிக்கிறது. எதிரணியை பொறுத்து யாரை களமிறக்க வேண்டும் என்பதை முடிவு செய்வோம்.

ஆடுகளங்கள் எப்படி இருக்கும், எதிரணியின் கலவை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் உண்மையில் யோசித்த ஒரு விஷயம் நடு ஓவர்களில் அதிரடியாக விளையாடுவதுதான். இதை கருத்தில் கொண்டே ஷிவம் துபே சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்காக விளையாடிய சில ஆட்டங்களின் செயல் திறன் அடிப்படையிலேயே அவரை தேர்வு செய்துள்ளோம்.

எங்களது விளையாடும் லெவன் எப்படி இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஐபிஎல் போட்டிகளில் வெளிப்படுத்தும் திறன் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது. யார் வேண்டுமானாலும் வந்து சதம் அடிப்பார்கள், ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள்.டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெறும் 70-80 சதவீதம் பேரை ஐபிஎல் தொடருக்கு முன்பு நாங்கள் அறிவோம். இவ்வாறு ரோஹித் சர்மா கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்