CSK vs SRH | ருதுராஜ் அதிரடியில் சிஎஸ்கே 212 ரன்கள் குவிப்பு @ ஐபிஎல்

By செய்திப்பிரிவு

சென்னை: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 212 ரன்கள் குவித்துள்ளது. அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 98 ரன்கள் குவித்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஐபிஎல் தொடரின் 45வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஏப்.28) இரவு 7.30 மணியளவில் தொடங்கிய போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணியில், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அஜிங்க்ய ரஹானே ஓப்பனிங் செய்தனர். இதில் ரஹானே 12 பந்துகளிலேயே 9 ரன்களிலேயே ஷபாஸ் அஹமதுவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டேரி மிட்செல் நிதானமாக ஆடி ஏழு பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் என 32 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். எனினும் 13 ஓவர்கள் தாக்குப்பிடித்த அவர் உனட்கட் வீசிய பந்தை தூக்கி அடிக்க முயன்று நிதிஷ் குமாரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து இறங்கிய ஷிவம் துபே, எதிரில் இருந்த ருதுராஜ் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான்கு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். கேப்டன் ருதுராஜ் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். மூன்று சிக்ச்ஸர்கள், பத்து பவுண்டரிகள் என விளாசி 98 ரன்கள் எடுத்தார். சதம் அடித்திருக்க வேண்டிய நிலையில் 19.2வது ஓவரில் சிக்ஸர் விளாச முயன்று அவுட் ஆகி வெளியேறினார்.

இறுதி ஓவரில் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பின் இடையே இறங்கிய தோனி முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து இரண்டு பந்துகளில் ஐந்து ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 212 ரன்கள் குவித்திருந்தது. தோனி, துபே இருவரும் அவுட் ஆகாமல் இருந்தனர். ஹைதராபாத் அணியில் புவனேஸ்வர், நடராஜன், ஜெயதேவ் உனட்கட் தலா ஒரு விக்கெட் எடுத்திருந்தனர். ஹைதராபாத் அணி 213 என்ற இலக்குடன் ஆடி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE