பவுலிங் கலையை ஒழித்துக் கட்டும் ஐபிஎல் - குறுகிக் கொண்டே வரும் எல்லைக் கோடு!

By ஆர்.முத்துக்குமார்

ஈடன் கார்டன்ஸில் வெள்ளிக்கிழமை பொழிந்த சிக்சர்கள் மழை, இந்தக் கோடை வெயிலில் ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கலாமே தவிர, கிரிக்கெட்டுக்கு நல்ல அறிகுறியாகத் தெரியவில்லை. ஐபிஎல் என்னும் கிரிக்கெட் குளோபல் வார்மிங், கிரிக்கெட்டின் சூழலியலையே நாசம் செய்து வருகிறது. உண்மையான குளோபல் வார்மிங்கில் நிலத்துக்குள் கடல் ஊடுருவது போல் ஐபிஎல் குளோபல் வார்மிங்கில் எல்லைக்கோடுகள் மைதானத்துக்குள் வந்தபடியே இருக்கின்றன. ஹர்ஷா போக்ளே கூறுவது போல் “நாளுக்கு நாள் எல்லைக் கோட்டின் தூரம் குறைந்து கொண்டே வருகின்றன.”

கொல்கத்தா - பஞ்சாப் ஆட்டத்தில் மொத்தம் 523 ரன்கள் 38.4 ஓவர்களில் குவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 42 சிக்சர்கள். இதில் ராகுல் சஹாரும் பெரிய அளவில் சுனில் நரைனும் தப்பினர் என்றே கூற வேண்டும். இதை வைத்துக் கொண்டு ஐபிஎல் ஆதரவாளர்கள் சிலர், ‘திறமை இருந்தால் எந்த கண்டிஷனிலும் வீசுவார்கள்’ என்று கூறுவார்களேயானால், நாட்டில் 62 கோடி பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்னும் பொருளாதார சூழ்நிலையில், ‘திறமை இருந்தால் வேலை கிடைக்கும்’ என்று கூறுவது போன்ற வாதமே.

கேட்டால் மே.இ.தீவுகள் மைதானம் சிறியது, அதற்கு வீரர்களைத் தயார் செய்கிறோம் என்பார்கள். ஆனால் நிச்சயம் மே.இ.தீவுகளில் பிட்ச், அஸ்வின் சொல்வது போல் ‘பால் பாயாச’ பிட்ச் ஆக இருக்காது. பந்துகள் பேட்டுக்கு வருவதற்குள் ஐபிஎல் அனாயாச மட்டை சுழற்றிகள் மட்டையை சுழற்றி முடித்து விடுவார்கள். பந்து மாட்டாது.

அஸ்வின் நேற்றைய ஆட்டத்தைப் பற்றிக் கூறும்போது, ‘‘260 ரன்களை சேஸ் செய்யும் போது கடைசி 2 ஓவர்களில் பந்துக்கு ஒரு ரன் தேவை என்ற நிலை. let that sink in என்று கூறியுள்ளார். இதோடு இன்னொரு ட்வீட்டில் ‘பவுலர்களை யாராவது தயவு கூர்ந்து காப்பாற்றுங்கள்’’ என்று கெஞ்சுகிறார். ஹர்ஷா போக்ளே, ‘‘எத்தனை அடித்தால்தான் போதும்? எல்லைக் கோடுகள் நாளுக்கு நாள் குறைக்கப்படுகின்றன’’ என்று கூறுகிறார்.

மேலும், என்னதான் ஷஷாங்க் சிங்குகளும் அபிஷேக் சர்மாக்களும், சாய் சுதர்சன்களும், வெங்கடேஷ் அய்யர்களும், ரியான் பராகுகளும் விளாசித் தள்ளினாலும் இந்திய டி20 உலகக் கோப்பை அணி என்னவோ வயதான ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா, சூரியகுமார் என்றுதான் இருக்கப்போகிறது. இதற்கு ஏன் இத்தனை விளம்பரம். பாதிக்கப்படுவோர் பவுலர்களே.

அதேபோல் ஐபிஎல் தொடரை நம்பி, இதில் ஷைன் ஆனால் இந்திய அணிக்குத் தேர்வாகலாம் என்று நம்பி, அதிரடியா ஆடி வரும் இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு என்பது பாண்டியராஜன் காமெடி ஒன்றில் வருவது போல் ‘மாமா பிஸ்கோத்து’ தான்.

கடைசியில் பவுலிங் கலையையே அழித்துவிடப் போகிறது ஐபிஎல். ஏற்கெனவே உம்ரன் மாலிக் என்னும் ஓர் அதிசய பவுலர் கரியர் காலியாகி விட்டது. இப்போது மயங்க் யாதவ் என்று ஒருவர் அனாயசமாக மணிக்கு 155 கிமீ வேகம் வீசுகிறார். இவரது கரியரையும் அழிக்காமல் ஐபிஎல் ஓயாது என்றே தோன்றுகிறது.

ஐபிஎல் தனி உரிமையாளர்களின் லாப வேட்டைக்காக ரன்கள் குவிப்பு பிட்சைப் போட்டும், பவுண்டரிகளின் தூரங்களை நாளுக்கு நாள் குறைக்கப்படுவதும் கிரிக்கெட்டை அழிவு நோக்கித் தள்ளிக் கொண்டே செல்கின்றன. இப்போதே கிரிக்கெட் வல்லுநர்கள், கிளாசிசிஸ்டுகள், கிரிக்கெட் வாரியங்கள் இதற்கு எதிராக அழுத்தம் கொடுக்கவில்லை எனில் கிரிக்கெட் ஆட்டம் என்னும் ஒன்று நினைவுகூரப்படும்படி ஆகிவிடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்