கேண்டிடேட்ஸ் சாம்பியன் குகேஷுக்கு உற்சாக வரவேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

17 வயதான சென்னையை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், கனடாவின் டொராண்டோ நகரில் சமீபத்தில் முடிவடைந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தார்.

இதன் மூலம் அவர், உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கான ஆட்டத்தில் சீனாவின் டிங் லிரனுடன் இந்த ஆண்டு இறுதியில் மோத உள்ளார். இந்நிலையில் கேண்டிடேட்ஸ் சாம்பியனான குகேஷ், டொராண்டோ வில் இருந்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் சென்னை வந்து சேர்ந்தார்.

விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. குகேஷ் படித்து வரும் வேலம்மாள் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிகாலையிலேயே விமான நிலையத்திற்கு வருகை வந்து குகேஷை வரவேற்றனர்.

அகில இந்திய செஸ் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு செஸ் சங்க நிர்வாகிகளும் குகேஷை வரவேற்று வாழ்த்தினர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் வழியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தனது அம்மா பத்மாவை நேரில் பார்த்ததும் புன்னகை பூரித்த குகேஷ், விரைந்து வந்து அவரை கட்டியணைத்தார். குகேஷின் உறவினர்கள் சிலரும் அவரை வரவேற்க விமான நிலையம் வந்திருந்தனர்.

குகேஷ் கூறும்போது, “சென்னைக்கு திரும்பியதில் மகிழ்ச்சியடைகிறேன். கேண்டிடேட்ஸ் தொடரில் பட்டம் வென்றது சிறப்பு சாதனை. போட்டியின் தொடக்கத்தில் இருந்தே நான் நல்ல இடத்தில் இருந்தேன், இந்த தொடரில் நான் முதலிடம் பெறுவேன் என்று எனக்கு முழு நம்பிக்கை இருந்தது, அதிர்ஷ்டமும் என் பக்கம் இருந்தது.

ஏராளமானோர் செஸ் விளையாட்டை ரசிக்கின்றனர். இதை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது அப்பா, அம்மா, பயிற்சியாளர், நண்பர்கள். குடும்பத்தினர், ஸ்பான்சர் மற்றும் எனது பள்ளி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்கள் அனைவருமே கேண்டிடேட்ஸ் தொடரில் நான் வெற்றி பெற உதவியாக இருந்தனர். விஸ்வநாதன் ஆனந்த் அனைவருக்கும் உந்துதல் அளிக்கக் கூடியவர். எனது செஸ் வாழ்க்கையில் அவர். மிகப்பெரிய பங்கு வகித்துள்ளார்” என்றார்.

உலக சாம்பியன்ஷிப்பை நடத்த உரிமை கோருவோம்: இந்திய செஸ் கூட்டமைப்பு செயலாளர் தகவல் - உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதற்கான உரிமையை கோருவோம் என அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளர் தேவ் படேல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, “சர்வதேச செஸ் கூட்டமைப்புடன்(ஃபிடே) நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். உலக சாம்பியன்ஷிப் செஸ் போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம். என்னை பொறுத்தவரையில் இது உலக சாம்பியன்ஷிப் போட்டியை மட்டும் நடத்துவதற்கான முன்மொழிவு அல்ல.

செஸ் விளையாட்டை நாட்டில் பிரபலமான விளையாட்டாக மாற்ற வேண்டும். சர்வதேச செஸ் கூட்டமைப்பை வெள்ளிக்கிழமை (இன்று) தொடர்பு கொள்கிறோம். குஜராத், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் போட்டியை நடத்துவதற்கான வரிசையில் நிற்கக்கூடும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE