இம்பாக்ட் பிளேயர் விதியால் ஆல்ரவுண்டருக்கு ஆபத்து: அக்சர் படேல் கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி அணி ஒரு கட்டத்தில் 44 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் அதன் பின்னர் அக்சர் படேல், ரிஷப் பந்த் கூட்டணி அபாரமாக விளையாடி 225 ரன்கள் இலக்கை கொடுத்தது.

அக்சர் படேல் 43 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 66 ரன்களும் ரிஷப் பந்த் 43 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 88 ரன்களும் விளாசினர். இறுதிக்கட்ட ஓவர்களில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 7 பந்துகளில் 26 ரன்கள் விளாசியதும் டெல்லி அணி வலுவான இலக்கை கொடுக்க உதவியது.

225 ரன்கள் இலக்கை விரட்டிய குஜராத் டைட்டன்ஸ் அணி 220 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. முகேஷ் குமார் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் குஜராத் அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவையாக இருந்தது.

முதல் இரு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டிய ரஷித் கான் அடுத்த இரு பந்துகளையும் வீணடித்தார். இதனால் 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலைஉருவானது. 5-வது பந்தை ரஷித் கான் சிக்ஸருக்கு பறக்கவிட ஆட்டத்தின் பரபரப்பு அதிகமானது. கடைசி பந்தை முகேஷ் குமார், தாழ்வான புல்டாஸாக வீசினார்.

இதை ரஷித் கான் விளாச முயன்றார். ஆனால் பந்து மட்டையில் சரியாக சிக்காத நிலையில் லாங் ஆன் திசையில் நின்ற டிரிஸ்டன் ஸ்டப்ஸிடம் செல்ல டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ரிஷப் பந்த் தேர்வானார்.

டெல்லி அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. 9 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 5 தோல்வி, 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. ரிஷப் பந்த்துடன் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் குவித்ததுடன் பந்து வீச்சில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி வெற்றிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான அக்சர் படேல் கூறியதாவது:

ஒரு ஆல்ரவுண்டராக, இம்பாக்ட் பிளேயர் விதியால் ஆல்ரவுண்டர்களின் நிலைமை ஆபத்தில் இருப்பதாக உணர்கிறேன். ஒவ்வொரு அணியும் முழுமையான பேட்ஸ்மேன் அல்லது முழுமையான பந்துவீச்சாளரை இம்பாக்ட் பிளேயராக களமிறக்கி விளையாட விரும்புகின்றன. இதனால் ஆல்ரவுண்டர்கள் பயன்படுத்தப்படுவதில்லை.

பேட்டிங் அல்லது பந்து வீச்சு தேர்வை பொறுத்து இம்பாக்ட் பிளேயருடன் ஒவ்வொரு அணியும்6 பேட்ஸ்மேன்கள் அல்லது பந்து வீச்சாளர்கள் தங்களிடம்இருப்பதாக கருதி களமிறங்குகிறார்கள். இது சிலநேரங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங்கில் நான் 3-வது வீரராக களமிறங்குவேன் என்பது முன்பே எனக்கு தெரியாது. எதிரணியினர் 3 சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு விளையாடுவதால் என்னை களமிறங்க கூறினார்கள். முதலில் ரிஷப் பந்திடம் கேட்கப்பட்டது.

பின்னர் விவாதித்து நான் களமிறங்குவதாக கூறினேன். அப்போது கூட ரிஷப் பந்த் களமிறங்க விரும்பினார். ஆனால், அவர்கள் சுழற்பந்து வீச்சாளர்களை பிற்பகுதியில் பயன்படுத்துவார்கள் எனக் கூறினேன். மேலும் 4-வது வீரராக நீங்கள் களமிறங்கினால் நடு ஓவர்களை திறம்பட சமாளிக்க முடியும் எனவும் ரிஷப் பந்திடம் கூறினேன்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் நான் எதையும் புதிதாக செய்யவில்லை. வேகத்தில் சில மாறுபாடுகளை சேர்த்துள்ளேன். இதற்கு முன்னர் வேகம் குறைந்த பந்துகளை வீசுவதில் எனக்கு நம்பிக்கை இருந்தது இல்லை. ஆனால் தற்போது அதில் நம்பிக்கை கிடைத்துள்ளது.

பந்து வீச்சில் மேற்கொள்ளும் வேக மாறுபாடுகள் இப்போது ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன. அதிக ரன்கள் குவிக்கப்படும் ஆட்டங்களில் சரியான அணுகுமுறையைக் கொண்டிருப்பது முக்கியம். இவ்வாறு அக்சர் படேல் கூறினார்.

ஒவ்வொரு அணியும் ஆட்டத்துக்கு முன்னதாக வழக்கமாகக் கொடுக்கப்படும் 11 வீரர்களின் பெயர்களோடு 4 மாற்று வீரர்களின் பெயர்களையும் அளிக்க வேண்டும். அந்த 4 வீரர்களில் ஒருவரை ஆட்டத்தின் நடுவில் இம்பாக்ட் பிளேயர் விதியின் கீழ் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த விதியை மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா, ஆர்சிபி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் உள்ளிட்டோர் விமர்சித்து இருந்தனர். இந்த வரிசையில் தற்போது அக்சர் படேலும் இணைந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்