ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
180 ரன்கள் இலக்கை துரத்திய இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
முன்னதாக பந்து வீச்சில் ராஜஸ்தான் அணியின் சந்தீப் சர்மா 4 ஓவர்களை விசி 18 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வேட்டையாடினார். இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோரை சந்தீப் சர்மா விரைவிலேயே ஆட்டமிழக்கச் செய்ததால் மும்பை அணியின் ரன் குவிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் திலக் வர்மா 65, நேஹல் வதேரா 49 ரன்கள் விளாசியதால் மும்பை அணியால் சற்று வலுவான இலக்கை கொடுக்க முடிந்தது.
எனினும் பந்து வீச்சில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாததால் மும்பை தோல்வியை சந்தித்தது. மும்பை அணிக்கு இது 5-வது தோல்வியாக அமைந்தது. 8 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 3 வெற்றி, 5 தோல்விகளுடன் 6 புள்ளிகளை பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. 7-வது வெற்றியை பதிவு செய்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 8 ஆட்டங்களில் ஒரே ஒரு தோல்வியுடன் 14 புள்ளிகளை குவித்து பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்துக்குப் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது:
தொடக்கத்திலேயே எங்களுக்கு நாங்களே சிக்கலை உருவாக்கிக் கொண்டோம். இருப்பினும் திலக் வர்மா, நேஹல் வதேரா ஆகியோர் அற்புதமாக பேட்டிங் செய்தனர். தொடக்கத்திலேயே இரு விக்கெட்களை இழந்ததால் 180 ரன்கள் வரை சேர்ப்போம் என நாங்கள் நினைக்கவில்லை. எனினும் பேட்டிங்கில் ஆட்டத்தை சிறப்பாக முடிக்கவில்லை. இதன் காரணமாகவே 10 முதல் 15 ரன்கள் குறைவாக இருந்தோம்.
பந்து வீச்சிலும் ஸ்டெம்புகளுக்கு குறிவைத்து செயல்படத் தவறினோம். பவர்பிளேவில் அதிக அகலத்துடன் பந்துகளை வீசிவிட்டோம். பீல்டிங்கிலும் இந்தநாள் எங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. ஒட்டுமொத்தமாக நாங்கள் சரியான அடியை எடுத்து வைக்கவில்லை. அதேவேளையில் ராஜஸ்தான் அணியினர் எங்களைவிட சிறப்பாக விளையாடினார்கள்.
போட்டி முடிவடைந்த பிறகு வீரர்களிடம் சென்று பேசுவதற்கு இது சரியான நேரம் அல்ல. எல்லோருமே தொழில்முறை வீரர்கள். இதனால் அவர்கள், தங்களது பணியை அறிவார்கள். இந்த விளையாட்டில் இருந்தும், நாம் செய்த தவறுகளில் இருந்தும் பாடம் கற்றுக்கொண்டு, அதை சரிசெய்து கொள்ள வேண்டும். மீண்டும் அதே தவறுகளை செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முன்னேற்றம் மிகவும் முக்கியமானது.
அணிக்குள் தனித்தனியாக, நாங்கள் எங்கள் குறைபாடுகளை ஏற்றுக்கொண்டு அவற்றை சரிசெய்ய வேண்டும். வீரர்களை நீக்குவதில் எனக்கு அதிக நம்பிக்கை வைக்கவில்லை, நான் வீரர்களை ஆதரிக்க விரும்புகிறேன். எப்போதும் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவதிலும், எங்கள் திட்டங்களில் ஒட்டிக்கொள்வதிலும், அடிப்படை பிழைகளை நாங்கள் செய்யாமல் இருப்பதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
கிரிக்கெட் எளிமையானது, நாம் அதை எளிமையாக வைத்திருக்கும் வரை, அது நல்லது. இவ்வாறு ஹர்திக் பாண்டியா கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago