குஜராத் டைட்டன்ஸுடன் இன்று மோதல்: வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் டெல்லி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியானது 8 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி,5 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக இரு வெற்றிகளை பெற்ற அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் 67 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வி கண்டிருந்தது.

பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற வேண்டுமானால் இனிவரும் ஆட்டங்களில் கணிசமான வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி.

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டனாக ரிஷப்பந்த் ஒருசில தவறுகளை செய்தார்.பனிப்பொழிவை தவறாக கணக்கிட்ட அவர், டாஸ் வென்றதும் பீல்டிங்கை தேர்வு செய்தார். நடப்பு சீசனில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தால் சாதனை படைக்கும் அளவிலான ரன் வேட்டை நிகழ்த்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் நிலையில் ரிஷப் பந்த்தின் டாஸ் முடிவு ஏமாற்றம் அளித்தது.

இதன் பின்னர் கலீல் அகமது வீசிய முதல் ஓவரில் 19 ரன்கள் விளாசப்பட்ட நிலையில் 2-வது ஓவரை லலித் யாதவுக்கு வழங்கி ஹைதராபாத் அணியின் ரன் வேட்டைக்கு பெரிய அளவிலான பாதையை அமைத்துக் கொடுத்தார்.

முதல் இரு ஓவர்களையும் சரியாக பயன்படுத்திக் கொண்ட ஹைதராபாத் அணி பவர்பிளேவில் மட்டும் விக்கெட் இழப்பின்றி 125 ரன்களை குவித்து மிரட்டியிருந்தது. டெல்லி அணியின் ஒட்டுமொத்த பந்து வீச்சையும் ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் கடும் சிதைவுக்கு உட்படுத்தி 266 ரன்களை குவித்தனர்.

கலீல் அகமது மட்டும் 3 ஓவர்களில் 51 ரன்களை தாரை வார்த்திருந்தார். நடப்பு சீசனில் அவரிடம் இருந்து தொடர்ச்சியாக சிறந்த திறன் வெளிப்படாதது அணியின் பந்துவீச்சு செயல் திறனை வெகுவாக பாதித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவின் அன்ரிச் நோர்க்கியாவிடம் இருந்தும் எதிர்பார்த்த அளவிலான செயல்திறன் வெளிப்படவில்லை.

இந்த சீசனில் 5 ஆட்டங்களில் 10 விக்கெட்கள் கைப்பற்றிய குல்தீப்யாதவின் பந்து வீச்சும் ஹைதராபாத் அணிக்கு எதிராக கைகொடுக்கவில்லை. அவரது பந்து வீச்சிலும் 7 சிக்ஸர்கள் விளாசப்பட்டு இருந்தன. முதுகுவலி காரணமாக கடந்த ஆட்டத்தில் களமிறங்காத இஷாந்த் சர்மா இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும்.

டெல்லி அணியின் பேட்டிங்கும் சீரற்றதாக உள்ளது. ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 267 ரன்கள் இலக்கை துரத்திய நிலையில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான டேவிட் வார்னர், பிரித்வி ஷா ஏமாற்றம் அளித்தனர். எனினும்ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் 18 பந்துகளில் 65 ரன்களையும், அபிஷேக் போரல் 22 பந்துகளில் 42 ரன்களையும் விளாசி நம்பிக்கை கொடுத்தனர்.

ஒரு கட்டத்தில் 8 ஓவர்களில் 131 ரன்களை டெல்லி அணி குவித்திருந்தது. ஆனால் அதன் பின்னர் களமிறங்கிய ரிஷப் பந்த் உள்ளிட்ட மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவிலான தாக்குதல் ஆட்டத்தை மேற்கொள்ளத் தவறினர்.

இதனால் கடைசி 12 ஓவர்களில் டெல்லி அணியால் மேற்கொண்டு 68 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி ஓவரின் முதல் பந்து வரை ரிஷப் பந்த் களத்தில் நின்ற போதிலும் அவரால் 35 பந்துகளில் 44 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதற்கு பந்து வீச்சில் ஹைதராபாத் அணி மேற்கொண்ட வியூகங்களும் முக்கிய காரணமாக அமைந்திருந்தன.

ஏனெனில் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் வேகம் குறைந்த பந்துகளை வீசினர். இது டெல்லி அணியின் ரன் குவிப்பை அதளபாதாளத்துக்கு கொண்டு சென்று தோல்வியை தழுவச்செய்தது.

ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் தொடர்ச்சியான செயல் திறனை வெளிப்படுத்துவது இல்லை. அந்த அணி 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. கடைசியாக அந்த அணி பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. பேட்டிங்கில் ஷுப்மன் கில்லை மட்டுமே பிரதானமாக நம்பியிருப்பது பலவீனமாகி உள்ளது.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 143 ரன்கள் இலக்கையே குஜராத் அணி போராடிதான் வெற்றி கண்டிருந்தது. அந்த ஆட்டத்தில் ராகுல் டிவெட்டியா இறுதிக்கட்ட ஓவர்களில் மட்டையை சுழற்றியதால் வெற்றி வசப்பட்டது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டுமானால் ரித்திமான் சாஹா, சாய் சுதர்சன், டேவிட் மில்லர், அஸ்மதுல்லா ஓமர்ஸாய் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிலான மட்டை வீச்சை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

பந்து வீச்சில் மோஹித் சர்மா, ரஷித் கான், சாய் கிஷோர் ஆகியோர் டெல்லி அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி செய்யக்கூடும்.

இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் 2-வது முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. கடந்த 17-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் அணியை வெறும் 89 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்திருந்தது டெல்லி அணி. அந்த ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்