RR vs MI | சதம் விளாசிய ஜெய்ஸ்வால் - மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ்

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் 38-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ராஜஸ்தான் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்தப் போட்டியில் சதம் விளாசி தனது அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார்.

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.

52 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது மும்பை. ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் மற்றும் முகமது நபி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நேஹல் வதேரா மற்றும் திலக் வர்மா இணைந்து 99 ரன்களுக்கு பாட்னர்ஷிப் அமைத்தனர்.

24 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து வதேரா ஆட்டமிழந்தார். பாண்டியா 10 ரன்களில் வெளியேறினார். திலக் வர்மா 65 ரன்கள் எடுத்தார். டிம் டேவிட் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். கோட்ஸி ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ராஜஸ்தான் அணி விரட்டியது. ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். பட்லர் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட் செய்ய வந்தார். அவருடன் 2-வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தார் ஜெய்ஸ்வால். 59 பந்துகளில் அவர் சதம் எட்டினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரது இரண்டாவது சதம் இது. அவரி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மறுமுனையில் பேட் செய்த சஞ்சு சாம்சன், 38 ரன்கள் எடுத்திருந்தார். 18.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. நடப்பு சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது அந்த அணி. இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றிய ராஜஸ்தான் பவுலர் சந்தீப் சர்மா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE