புதுடெல்லி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது பவர்பிளே ஓவர்களில் ரன்களை விளாசியதால் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் நேற்று முன்தினம் இரவு ஹைதராபாத், டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் 89 (32 பந்துகள், 11 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்), அபிஷேக் சர்மா 46 (12 பந்துகள், 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள்), நித்திஷ் ரெட்டி 37(27 பந்துகள், 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள்), ஷாபாஸ் அகமது 59 (29 பந்துகள் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள்) ரன்களை விளாசித் தள்ளினர். இதனால் அந்த அணி 266 ரன்களைக் குவித்தது.
டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும், முகேஷ் குமார், அக்சர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் விளையாடிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் 199 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
டெல்லி அணியின் பிரித்வி ஷா 16, டேவிட் வார்னர் 1, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 10, லலித் யாதவ் 7, அக்சர் படேல் 6 ரன்கள் எடுத்தனர். ஜேக் பிரேசர் மெக்கர்க் அபாரமாக விளையாடி 18 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார். அபிஷேக் போரல் 42 ரன்களும், கேப்டன் ரிஷப் பந்த் 44 ரன்களும் எடுத்தனர்.
ஹைதராபாத் அணி தரப்பில் டி. நடராஜன் 4 விக்கெட்களைச் சாய்த்தார். மயங்க் மார்க்கண்டே, நித்திஷ் ரெட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், வாஷிங்டன் சுந்தர், புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர். ஆட்டநாயகனாக ஹைதராபாத் அணி வீரர் டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஹைதராபாத் அணி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. டெல்லி அணி 8 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்விகளுடன் 6 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கூறியதாவது:
டாஸில் வெற்றி பெற்றபோது மகிழ்ச்சி அடைந்தோம். பந்து வீசுவதற்கு முடிவு செய்த பின்னர் 2-வது பேட்டிங்கின்போது பனிப்பொழிவு இருக்கும் என நினைத்தோம்.
ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை போல் எந்த பனிப்பொழிவும் வரவில்லை. ஆனால் நாங்கள் ஹைதராபாத் அணியை 220 முதல் 230 ரன்களுடன் கட்டுப்படுத்தி இருந்தால், எங்களுக்கு வெல்வதற்கான வாய்ப்பு இருந்திருக்கும்.
ஹைதராபாத் அணியினர் பவர்பிளே ஓவர்களில் விளாசியதுதான் பெரிய மாற்றமாக அமைந்துவிட்டது. அதுவே எங்களது தோல்விக்கு வழிவகுத்து விட்டது. ஏனென்றால், அவர்கள் பவர்பிளே ஓவர்களில் 125 ரன்களை விளாசினார்கள். 6 ஓவர்களில் 125 ரன்களை விளாசியபோதே எங்களது தோல்வி தெரிந்துவிட்டது. அதன்பின் அவர்களை நாங்கள் கட்டுப்படுத்தும் முயற்சியில் மட்டுமே ஈடுபட முடிந்தது.
அதேபோல் நாங்கள் பேட்டிங் செய்யும் போது ஆடுகளத்தில் பந்து நன்றாக நின்று வந்தது. 267 ரன்கள் என்ற இலக்கு மிகப்பெரியது. இதுபோன்ற நேரங்களில் அனைத்து வீரர்களும் தொடர்ச்சியாக ரன்கள் சேர்க்க வேண்டும். ஆனால் அந்த ரன்குவிப்பு நடக்கவில்லை. அடுத்தடுத்து வரும் போட்டிகளில் கூடுதல் திட்டங்களுடன் தெளிவான மனநிலையுடன் களமிறங்க வேண்டும்.
இந்தப் போட்டியில் ஜேக் பிரேசர் மெக்கர்க் மிகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடினார். ஓர் அணியாக இதுபோன்ற வீரர்களிடம் இருந்து இப்படிப்பட்ட ஒரு இன்னிங்ஸ் தேவைப்படுகிறது. அடுத்து வரும் போட்டிகளில் சரி செய்ய வேண்டிய பிரச்சினைகள் குறித்து நாங்கள் அலசி ஆராய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago