பதிரனா எனும் புதிரும், ரோகித்தின் கடைசிநேர மந்த பேட்டிங்கும் | ஐபிஎல் அலசல்

By ஆர்.முத்துக்குமார்

சிஎஸ்கே வெற்றிக்குக் காரணம் ஷிவம் துபே, ருதுராஜ், தோனியின் 3 சிக்சர்கள் ஆகியவற்றில் தோனி என்னும் வர்த்தக முத்திரையைத் தூக்கிப்பிடிப்பது வழக்கம், ஆனால் பதிரனா என்னும் எக்ஸ்-ஃபாக்டர் என்பார்களே அத்தகைய புதிர் பந்து வீச்சுதான் ஒற்றைத்தன்மை கொண்ட சிஎஸ்கே அணிக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.

கடைசி ஓவரை ஒருவர் இவ்வளவு மட்டமாக வீச முடியுமா என்றால் அதற்கு ஆமாம் என்பார் ஹர்திக் பாண்டியா. ஏதோ புதிய பவுலர், அனுபவமற்றவர் என்றால் பரவாயில்லை, ஒரு அணியின் கேப்டன், அதுவும் அவர் மீது கண்கொத்திப் பாம்பாக ரசிகர்கள் பார்வை இருக்கும் போது தோனி கிரீசில் இருக்கும் போது என்ன தைரியத்தில் அவர் கடைசி ஓவரை வீச முடியும்? பும்ராவை கடைசி ஓவரை வீசுமாறு எப்போதுமே செய்ய வேண்டும். ஆனால் பாண்டியாதான் விசித்திர ஜீவியாயிற்றே, தன்னால்தான் எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைப்பவர், நேற்று நடந்து விட்டது. அதுதான் தோல்வி!

தோனி வலையில்தான் சிக்ஸ் அடித்துக் கொண்டிருந்தார், அவருக்குக் கொண்டு வந்து வலை பவுலர் போல் ‘இந்தா என்னை அடி’ என்பது போல் ஒரு பந்தல்ல 3 பந்துகளை வீசினார், மூன்றும் சிக்சர்கள். வைடு யார்க்கர்தான் தோனிக்குக் கசப்பு மருந்து என்று தெரிந்தும் லெந்த்தில் வீசி, கடைசியில் புல்டாஸ் ஒன்றையும் வீசி அவரது மட்டை வீச்சுக்கு வாகாக வீசியது ‘உஷ் கண்டுக்காதீங்க’ தருணமா என்ற கேள்வி எழுகிறது. இந்த 3 சிக்சர்கள்தான் டெக்னிக்கலாகப் பார்த்தால் மும்பை இந்தியன்ஸ் தோல்விக்குக் காரணம்.

ஆனால் மிக முக்கியக் காரணம் ரோகித் சர்மா கடைசியில் மந்தமானது ஏன் என்பதுதான் புரியாத புதிர், தொடக்கத்தில் மந்தமாக இருக்கலாம் கோலி போல், பிறகு அதிரடி காட்டுவது வழக்கம், ஆனால் பின்னால் மந்தமாக ஆடியதன் தாத்பரியம் என்னவென்று புரியவில்லை. கடைசி வரை நாட் அவுட்டாக இருந்து விட்டு ரோகித் சர்மாவினால் வெற்றி பெற வைக்க முடியாமல் போனது ஆச்சரியமே. இந்தப் பிட்சில் 200க்கும் சற்று கூடுதலான ரன்கள் என்பது விரட்டக் கூடியதே.

மும்பை பெரும்பாலும் வெற்றி பெறும் அணியாகத்தான் ஆடியது. கடைசி 7 ஓவர்களில் 83 ரன்கள் என்பது பார்ப்பதற்கு சிரமம் போல் தெரிந்தாலும் ரோகித் நிற்கும் போது இதெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் அங்குதான் பதிரனாவின் பவுலிங் என்னும் எக்ஸ் ஃபாக்டர் சிஎஸ்கேவுக்கு ஆச்சரியமான விக்கெட்டுகளைப் பெற்றுத் தந்தது.

ரோகித் சர்மா சதமெடுத்திருக்கலாம், ஆனால் அவரது இன்னிங்ஸில் பெரிய குறைபாடு என்னவெனில் 13வது ஓவர் முதல் 18வது ஓவர் வரை அவர் சந்தித்த 14 பந்துகளில் வெறும் 14 ரன்களையே அடித்தார். இதுதான் மும்பைத் தோல்விக்குப் பிரதான காரணம்.

ரோகித்தும் இஷான் கிஷனும் 7 ஓவர்களில் 70 ரன்களை விளாசினர். ஆனால் காயத்திலிருந்து மீண்டு இந்தப் போட்டியில் ஆடிய பதிரனா வந்தவுடன் இஷான் கிஷனை வீழ்த்தினார். சூரியகுமார் யாதவுக்கு அசுர வேகத்தில் வைடு யார்க்கர் ஒன்றை வீசினார். அடுத்த பந்தே அதற்கு நேர் மாறாக வைடு பவுன்சரை வீசினார், சூரியாவின் ஷாட் அங்கு டீப் தேர்ட்மேனில் முஸ்தபிசுர் ரஹ்மானின் அற்புதமான கேட்ச் ஆனது.

பிற்பாடு 7 ஓவர்களில் 83 ரன்கள் தேவை என்னும் போது மீண்டும் வந்தார் பதிரனா அற்புத ஸ்லோ பந்தில் அபாயத் திலக் வர்மாவை வெளியேற்றினார். அதன் பிறகு ரோகித் சர்மாவும் ஹர்திக் பாண்டியாவும் முடங்கிப் போயினர். ரொமாரியோ ஷெப்பர்டுக்கு பதிரனா 150 கிமீ வேக நேர் பந்தை ஃபுல் லெந்தில் வீச ஸ்டம்புகள் எகிறின.

ஷர்துல் தாக்கூரை, துஷார் தேஷ்பாண்டேயை அடிக்க முடியவில்லை என்பது நம்பும்படியாக இல்லை. பதிரனாவைத் தவிர சிஎஸ்கே பவுலிங்கில் ஒன்றுமில்லை. இலக்கு எட்டக்கூடியதாகத்தான் இருந்தது, ஆனால் ரோகித் சர்மா கடைசியில் டைமிங் கிடைக்காமல் தவித்ததால் மும்பை தோற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்