பாரிஸ் ஒலிம்பிக் | இந்தியக் குழு பொறுப்பில் இருந்து மேரி கோம் விலகல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுக்கான இந்திய குழுவின் திட்டத் தலைவர் (Chef-de-Mission) தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாக குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார். இதனை இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி.உஷா உறுதி செய்துள்ளார்.

“நாட்டுக்காக அனைத்து வகையிலும் சேவை செய்வதை நான் பெருமையாக கருதுகிறேன். அந்த வகையில் இந்த பொறுப்பில் செயல்பட நான் தயாராகவும் இருந்தேன். இருந்தாலும், இந்த பொறுப்பில் என்னால் தொடர முடியாமல் போனதற்கு நான் வருந்துகிறேன். தனிப்பட்ட காரணங்களுக்காக நான் இந்த பொறுப்பில் இருந்து விலகுகிறேன்” என மேரி கோம் தெரிவித்துள்ளார். பி.டி.உஷாவுக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் இந்திய வீரர்கள் அடங்கிய குழுவுக்கான தலைமை பொறுப்பில் ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றிருந்தார் மேரி கோம். “இந்த பொறுப்பிலிருந்து பின் வாங்குவது சங்கடமாக இருக்கிறது. ஆனால், எனக்கு இதை தவிர வேறு வழியில்லை. ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்களுக்கு உற்சாகம் கொடுப்பேன். அவர்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு கொண்டுள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

“தனிப்பட்ட காரணங்களுக்காக மேரி கோம் இந்த பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். அது வருத்தம் தருகிறது. விரைவில் அந்த பொறுப்பில் வேறு ஒருவர் நியமிக்கப்படுவார். மேரி கோமின் முடிவுக்கு நான் மதிப்பளிக்கிறேன். அவருக்கு எனது ஆதரவு உள்ளது என்பதையும் தெரிவித்துள்ளேன். அவரது முடிவுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டுகிறேன்” என பி.டி.உஷா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE