“எனக்கு எதிராக மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் சிங் சதி” - வினேஷ் போகத் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றில் தான் பங்கேற்பதை தடுக்க மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் சிங் முயன்று வருவதாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். தன்னை ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்க வைப்பதற்கான சதி நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கம் வென்றவர் வினேஷ் போகத். 29 வயதான அவர் ஒலிம்பிக்கிலும் போட்டியிட்டுள்ளார். கிர்கிஸ்தான் நாட்டில் அடுத்த வாரம் நடைபெற உள்ள ஆசிய தகுதி தொடரின் மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கான தகுதியை எதிர்நோக்கி உள்ளார். இந்தச் சூழலில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

“நான் ஒலிம்பிக்கில் விளையாடுவதை தடுக்கும் நோக்கில் பிரிஜ் பூஷன் மற்றும் அவரது ஆதரவாளர் சஞ்சய் சிங்கும் இணைந்து அனைத்து வழியிலும் முயற்சித்து வருகிறார்கள். அணியில் நியமிக்கப்பட்டுள்ள அனைத்து பயிற்சியாளர்களும் அவர்களது விசுவாசிகள். அதனால் நான் குடிக்கும் நீரில் எதையேனும் கலந்து கொடுக்க வாய்ப்புள்ளது. என்னை ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்க வைப்பதற்கான சதி வேலை நடக்கிறது. அதை மறுப்பதற்கு இல்லை.

கடந்த ஒரு மாத காலமாக எனது பயிற்சியாளர் மற்றும் பிசியோவுக்கு அங்கீகாரம் தர வேண்டுமென இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் நான் முறையிட்டு வருகிறேன். அது இல்லாமல் அவர்களால் போட்டி நடைபெறும் இடத்துக்கு வர முடியாது. பலமுறை நான் கேட்டுக்கொண்ட போதும், அதற்கான பதில் ஏதும் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. வீரர்களின் கேரியரில் இப்படி தான் விளையாடுவதா?

போட்டிக்கு முன் எங்களை மன ரீதியாக துன்புறுத்துகிறார்கள். பாலியல் கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்த காரணத்தால் விளையாட்டில் அரசியல் செய்கிறார்கள். தவறுக்கு எதிராக நம் நாட்டில் குரல் கொடுத்தால் இதுதான் தண்டனையா? நாட்டுக்காக நாங்கள் விளையாட செல்வதற்கு முன்பு எங்களுக்கு சரியான நீதி கிடைக்கும் என நம்புகிறேன்” என வினேஷ் தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் போராட்டம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE