லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் இன்று மோதல்: வெற்றிப் பாதைக்கு திரும்புமா டெல்லி?

By செய்திப்பிரிவு

லக்னோ: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோசூப்பர் ஜெயண்ட்ஸ் - டெல்லிகேபிடல்ஸ் மோதுகின்றன.

கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. கடைசியாக குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.

இந்த ஆட்டத்தில் 150 கிலோ மீட்டர் வேகத்துக்கும் அதிகமாக வீசக்கூடிய இளம் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் ஒரே ஒரு ஓவரை மட்டும் வீசிய நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். எனினும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தாக்குர் சிறப்பாக செயல்பட்டு 5 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றியில்முக்கிய பங்கு வகித்தார். வயிற்று பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் மயங்க் யாதவ் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவது சந்தேகம்தான்.

பேட்டிங்கில் குயிண்டன் டி காக், கே.எல்.ராகுல் சிறந்த தொடக்கம் அமைத்துக் கொடுக்கின்றனர். 2 அரை சதங்கள் அடித்துள்ள குயிண்டன் டி காக்கிடம் இருந்து மேலும்ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். கே.எல்.ராகுல் ஆட்டத்தை சிறப்பாக தொடங்கினாலும் அதை பெரிய அளவிலான ரன் வேட்டையாக மாற்ற முடியாமல் தடுமாறுகிறார். இதற்கு இன்றைய ஆட்டத்தில் அவர், தீர்வு காண முயற்சிக்கக்கூடும்.

நிக்கோலஸ் பூரனின் அதிரடி பேட்டிங் ஆட்டத்தின் பிற்பகுதியில் பெரிதும் உதவியாக திகழ்கிறது. மார்கஸ் ஸ்டாயினிஸ், ஆயுஷ் பதோனி ஆகியோரும் ரன்கள் சேர்க்க தொடங்கி உள்ளது அணியின் பேட்டிங் வரிசையை பலப்படுத்தி உள்ளது.

தேவ்தத் படிக்கல் மட்டுமே ரன்கள் சேர்க்க தடுமாறி வருகிறார். 4 ஆட்டங்களிலும் ஒன்றில் கூட அவர், இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் அவர், உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தியாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறார்.

ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 4 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. அணியின் முதன்மை பிரச்சினையாக பந்து வீச்சு உள்ளது. மேலும் பேட்டிங்கில் இளம் வீரர்களிடம் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல் திறன் வெளிப்படவில்லை.

பந்து வீச்சில் கலீல் அகமது, இஷாந்த் சர்மா ஆகியோரிடம் தொடர்ச்சியாக சிறந்த திறன் வெளிப்படவில்லை. முகேஷ் குமார்காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில்கள மிறங்கக்கூடும். எனினும் அவரும் இதுவரை எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மிதவேகப்பந்து வீச்சாளரான சுமித் குமார்,ரஷிக் தார் ஆகியோரது நிலைமையும் இதேதான். தென் ஆப்பிரிக்காவின் அன்ரிச் நோர்க்கியா, ஆல்ரவுண்டரான அக்சர் படேல் ஆகியோர் பார்மின்றி தவிப்பது அணியின் ஒட்டுமொத்த பந்து வீச்சையும் பலவீனமாக்கி உள்ளது.

பேட்டிங்கை பொறுத்தவரையில் ரிஷப் பந்த், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் மட்டுமேசீராக ரன்கள் குவித்து வருகின்றனர். பிரித்வி ஷா, டேவிட் வார்னர் ஆகியோர் ஒரு சில ஆட்டங்களில் மட்டுமே சிறப்பாக விளையாடினர். இவர்களுடன் அபிஷேக் போரலின் பேட்டிங் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. இதை தவிர்த்து மற்ற இந்திய இளம் வீரர்களிடம் இருந்து பெரிய அளவிலான செயல்திறன் வெளிப்படவில்லை. தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி அனைத்து துறைகளிலும் மேம்பட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்