MI vs RCB | 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி! @ ஐபிஎல்

By செய்திப்பிரிவு

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் 25-வது லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை மும்பை அணி வீழ்த்தியது.

மும்பை - வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. ஆர்சிபி அணிக்காக விராட் கோலி மற்றும் டூப்ளசி இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். கோலி, 9 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து பும்ரா பந்து வீச்சில் விக்கெட்டை இழந்து ரசிகர்களை ஏமாற்றினார். அறிமுக வீரர் வில் ஜேக்ஸ் 8 ரன்களில் வெளியேறினார்.

3-வது விக்கெட்டுக்கு ரஜத் பட்டிதார் மற்றும் டூப்ளசி இணைந்து 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பட்டிதார், 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து கோட்ஸி வசம் அவுட் ஆனார். 3 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். நான்கு பந்துகளை வீண் செய்த மேக்ஸ்வெல், டக் அவுட் ஆனார்.

பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் உடன் 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் டூப்ளசி. 40 பந்துகளில் 61 ரன்கள் எடுத்த அவர், பும்ராவிடம் 17-வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த பந்தில் மஹிபால் லோம்ரோரை வெளியேற்றினார் பும்ரா.

20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இறுதி வரை ஆட்டமிழாக்கமல் ஆடிய தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 53 ரன்கள் எடுத்ததார்.

197 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் இஷான் கிஷன், ரோஹித் சர்மா இருவரும் ஓப்பனிங் ஆடினர். ரோஹித் 24 பந்துகளுக்கு 38 ரன்கள், இஷான் 34 பந்துகளில் 69 ரன்கள் என ஆரம்பத்திலேயே அதகளப்படுத்தினர். 11வது ஓவரில் ரோஹித் வெளியேறவே, அடுத்து இறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது முதல் பந்திலேயே சிக்ஸரை பறக்க விட்டார்.

ஹர்திக் 21 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 52 ரன்கள், திலக் வர்மா 16 ரன்கள் என 15.3 ஓவர்களிலேயே 197 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE