MI vs RCB | தினேஷ் கார்த்திக் அதிரடி: ஆர்சிபி 196 ரன்கள் குவிப்பு - பும்ரா 5 விக்கெட்டுகள்!

By செய்திப்பிரிவு

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் 25-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இதில் ஆர்சிபி அணிக்காக கேப்டன் டூப்ளசி, ரஜத் பட்டிதார், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் குவித்து அசத்தினர்.

மும்பை - வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. ஆர்சிபி அணிக்காக விராட் கோலி மற்றும் டூப்ளசி இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். கோலி, 9 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து பும்ரா பந்து வீச்சில் விக்கெட்டை இழந்தார். அறிமுக வீரர் வில் ஜேக்ஸ் 8 ரன்களில் வெளியேறினார்.

3-வது விக்கெட்டுக்கு ரஜத் பட்டிதார் மற்றும் டூப்ளசி இணைந்து 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பட்டிதார், 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து கோட்ஸி வசம் அவுட் ஆனார். 3 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். நான்கு பந்துகளை வீண் செய்த மேக்ஸ்வெல், டக் அவுட் ஆனார்.

பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் உடன் 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் டூப்ளசி. 40 பந்துகளில் 61 ரன்கள் எடுத்த அவர், பும்ராவிடம் 17-வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த பந்தில் மஹிபால் லோம்ரோரை வெளியேற்றினார் பும்ரா. இருந்தும் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் முதல் வாய்ப்பை அவர் இழந்தார்.

தொடர்ந்து 19-வது ஓவரில் சவுரவ் சவுகானை அவுட் செய்தார் பும்ரா. அடுத்த பந்தில் வைஷாக்கை வெளியேற்றினார். இருந்தும் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் இரண்டாம் வாய்ப்பையும் இழந்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 4 ஓவர்களை வீசிய பும்ரா, 21 ரன்களை கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.

20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இறுதி வரை ஆட்டமிழாக்கமல் ஆடிய தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 53 ரன்கள் எடுத்ததார். ஆர்சிபி அணியில் டூப்ளசி, பட்டிதார் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன் எடுத்திருந்தனர். 197 ரன்கள் எடுத்தால் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெறலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE