பாகிஸ்தான் அணியில் மீண்டும் இடம் பிடித்த ‘வேகப் புயல்’ முகமது ஆமிர்!

By செய்திப்பிரிவு

லாகூர்: எதிர்வரும் 18-ம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் இடம் பெற்றுள்ளார்.

கடந்த 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்தச் சூழலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ஓய்வு முடிவை கடந்த மார்ச் மாதம் பின்வாங்கிக் கொண்டார். இத்தகைய நிலையில் நியூஸிலாந்து உடனான டி20 தொடரில் அவர் விளையாட உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 36 டெஸ்ட், 61 ஒருநாள் மற்றும் 50 டி20 போட்டிகளில் விளையாடிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் தான் ஆமிர். மொத்தம் 259 சர்வதேச விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சூதாட்ட புகாரில் சிக்கி 5 ஆண்டுகள் தடையை எதிர்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நடைபெற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடு காரணமாக கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் விலகினார். இந்த சூழலில் அவர் மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் இமாத் வாசிமும் சேர்க்கப்பட்டுள்ளார். அண்மையில் முடிந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உஸ்மான் கான், இர்ஃபான் கான் ஆகியோரும் நியூஸிலாந்து டி20 தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE