‘ரிஷப் பந்த் ஆடிய விதம் ஏமாற்றம் தந்தது’ - சேவாக் விமர்சனம்

By செய்திப்பிரிவு

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டத்தை விமர்சித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்.

273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை டெல்லி அணி விரட்டியது. இந்த போட்டியில் முதல் ஐந்து ஓவர்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது டெல்லி. கேப்டன் பந்த் மற்றும் ஸ்டப்ஸ் இணைந்து 93 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பந்த், 25 பந்துகளில் 55 ரன்கள் எடுத்திருந்தார். 166 ரன்களில் டெல்லி அணி ஆள் அவுட் ஆனது. இதற்கு முந்தைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராகவும் பந்த் அரைசதம் கடந்திருந்தார். இந்த நிலையில்தான் அவரது ஆட்டத்தை சேவாக் விமர்சித்துள்ளார்.

“பந்த் ஆடிய இன்னிங்ஸ் சிறப்பாக இருந்தது. ஆனால், இந்த சீசனின் முதல் இரண்டு போட்டியில் அவர் ரன் சேர்க்கவில்லை. இப்போது ரன் சேர்க்கும் போது விக்கெட்டை த்ரோ செய்கிறார். நீங்கள் களத்தில் நிலைத்து ஆடி இருக்க வேண்டும். சதம் கடந்த 110 அல்லது 120 ரன்னுடன் வீழ்த்த முடியாத பேட்ஸ்மேனாக திரும்பி இருக்க வேண்டும். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற முடியாது என தெரிந்த சூழலில் கூடுதலாக 20 பந்துகள் ஆடி இருக்க வேண்டும்.

ஏனெனில், உங்களுக்கு இது சிறந்த பேட்டிங் பயிற்சியாக அமைந்திருக்கும். இலக்கை அடைய முடியவில்லை என்றாலும் அதனை நெருங்கி இருக்கும் வாய்ப்பு இருந்தது. அதை நீங்கள் செய்திருக்க வேண்டும். அது எனக்கு ஏமாற்றமாக அமைந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு களம் கண்டுள்ள அவர் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். ஸ்ட்ரைக் ரேட்டும் சிறப்பாக உள்ளது” என சேவாக் தெரிவித்துள்ளார்.

கார் விபத்தில் சிக்கி காயமடைந்த அவர், சுமார் 14 மாத காலத்துக்கு பிறகு ஆடுகளம் திரும்பி உள்ளார். நடப்பு சீசனில் விளையாட அவர் ஃபிட் என அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE