சுனில் நரைன் மிரட்டல் அடி: டெல்லிக்கு 273 ரன்கள் இலக்கு @ ஐபிஎல்

By செய்திப்பிரிவு

விசாகப்பட்டினம்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களை குவித்தது. சுனில் நரைன் 85 ரன்களை குவித்தார்.

டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங்கை தேர்வு செய்தது. சுனில் நரைன் - ஃபில் சால்ட் ஓப்பனர்களாக களமிறங்கினர். சுனில் நரைன் சிறப்பான தொடக்கத்தை கொடுக்க, 18 ரன்களில் அவுட்டானார் ஃபில். அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி - சுனில் நரைனுடன் இணைந்து விளாச 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களைச் சேர்த்தது கொல்கத்தா. ஐபிஎல் தொடரில் 10 ஓவரில் எடுக்கப்பட்ட 3வது அதிகபட்ச ஸ்கோர் இது.

7 சிக்சர்களை விளாசி 85 ரன்களை குவித்த சுனில் நரைனை 13ஆவது ஓவரில் மிட்செல் மார்ஷ் விக்கெட்டாக்கினார். அவரைத் தொடர்ந்து 54 ரன்களில் அங்கிரிஷ் ரகுவன்ஷியும் வெளியேறினார். 15 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தாவின் ஸ்கோர் 195.

ஆந்த்ரே ரஸ்ஸல் - ஸ்ரேயஸ் ஐயர் பாட்னர்ஷிப் அமைக்க, ரஸ்ஸல் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார். ஸ்ரேயஸ் தன் பங்குக்கு 2 சிக்சர்களை விளாசினார். ஆனால் 18 ரன்களில் அவரை வெளியேற்றினார் கலீல் அகமது.

ரின்கு சிங் வந்த வேகத்தில் 3 சிக்சர்களை விளாசி 28 ரன்களுடன் நடையைக்கட்டினார். அடுத்த ஓவரில் ரஸல் 41 ரன்களில் போல்டானார் அதே ஓவரில் ரமன்தீப் சிங் 2 ரன்களுக்கு அவுட்.

தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி வந்த கொல்கத்தா இறுதிக்கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களைச் சேர்த்தது.

முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 277 ரன்களைச் சேர்த்து ஐபிஎல் தொடரில் அதிக பட்ச ஸ்கோர் சாதனையை படைத்திருந்தது. தற்போது கொல்கத்தா எட்டியிருக்கும் இந்த ரன்கள் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர்.

டெல்லி அணி தரப்பில் அன்ரிச் நோர்க்கியா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் மார்ஷ், கலீல் அகமது ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE