DC vs CSK | வார்னர், பிரித்வி ஷா, பந்த் அதிரடி: டெல்லி 191 ரன்கள் குவிப்பு

By செய்திப்பிரிவு

விசாகப்பட்டினம்: நடப்பு ஐபிஎல் சீசனின் 13-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி அணி 191 ரன்கள் குவித்தது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. டெல்லி அணிக்காக டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இருவரும் அதிரடி தொடக்கம் தந்தனர். சிஎஸ்கே பந்துவீச்சை துவம்சம் செய்து முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் குவித்தனர். வார்னர், 35 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய 10-வது ஓவரில் ஸ்விட்ச் ஹிட் ஆடி ஆட்டமிழந்தார். வார்னர் கொடுத்த வாய்ப்பை அபாரமாக கேட்ச் பிடித்து அசத்தியிருந்தார் பதிரனா.

தொடர்ந்து கேப்டன் ரிஷப் பந்த், பேட் செய்ய வந்தார். 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். பின்னர் மிட்செல் மார்ஷ் களத்துக்கு வந்தார். 15-வது ஓவரில் மார்ஷ் மற்றும் ஸ்டப்ஸ் விக்கெட்டை பதிரனா கைப்பற்றி இருந்தார். இருவரையும் யார்க்கர் வீசி போல்ட் செய்தார்.

இருந்தும் பந்த் மறுமுனையில் ரன் குவிப்பில் ஈடுபட்டார். 32 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அவர் கவனம் ஈர்த்தார். 18 மற்றும் 19-வது ஓவரில் முறையே 14 மற்றும் 17 ரன்கள் எடுத்தது டெல்லி. அதற்கு பந்த் ஆடிய அதிரடி ஆட்டம் காரணம். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது டெல்லி அணி. பவர்பிளே ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் குவித்திருந்தது டெல்லி. பதிரனா 3 விக்கெட்கள் வீழ்த்தினார். ஜடேஜா மற்றும் முஸ்தபிசுர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். துஷார் தேஷ்பாண்டே, 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விரட்டி வருகிறது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றால் நடப்பு சீசனில் ஹாட்ரிக் வெற்றியாக அமையும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE