விசாகப்பட்டினம்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே தனது முதல் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸையும் தோற்கடித்து இருந்தது. இதன் வாயிலாக 4 புள்ளிகளை பெற்றுள்ள சிஎஸ்கே நிகர ரன் ரேட் 1.979 உடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரு ஆட்டங்களையும் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே தனது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் விளையாடி இருந்தது.
சிஎஸ்கே அணியின் அடிப்படை தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதால் வலுவாக திகழ்கிறது. டாப் ஆர்டர் பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக விளையாடும் நிலையில் மற்றொரு தொடக்க வீரரான ரச்சின்ரவீந்திரா ஸ்டிரைக் ரேட்டை 200-க்கும் மேல் தொடரச் செய்து கொண்டே மட்டையை விளாசுவது அணிக்கு பலம் சேர்க்கிறது. அஜிங்க்ய ரஹானே, டேரில் மிட்செல் ஆகியோர் சூழ்நிலைக்கு தகுந்தவாறு பேட்டிங் செய்பவர்களாக உள்ளனர். நடுவரிசையில் ஷிவம் துபேவின் அதிரடி இரு ஆட்டங்களிலும் முக்கிய பங்கு வகித்தது.
இவர்களுடன் தற்போது சமீர் ரிஸ்வியும் மட்டையை சுழற்றத் தொடங்கி உள்ளது அணியின் வலுவை மேலும் அதிகரித்துள்ளது. ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் சீரான பங்களிப்பை வழங்கி வருகிறார். இரு ஆட்டங்களிலும் தோனிக்கு பேட்டிங் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் பீல்டிங்கில் ருதுராஜுக்கு தேவையான நேரங்களில் ஆலோசனைகளை வழங்கி அவருக்கு சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறார். பந்து வீச்சை பொறுத்தவரையில் மதீஷா பதிரனாவின் வருகை இறுதிக்கட்ட பந்து வீச்சை பலப்படுத்தி உள்ளது.
முதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்படத் தவறிய தீபக் ஷாகர், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி கவனம் ஈர்த்தனர். முஸ்டாபிஸுர் ரஹ்மானின் கட்டர்கள் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். டேரில் மிட்செலின் மிதவேகமும் அணிக்கு பலம் சேர்ப்பதாக உள்ளது.
ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியானது இந்த சீசனில் விளையாடி உள்ள இரு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்தது. முதல் ஆட்டத்தில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடைந்த டெல்லி கேபிடல்ஸ், அடுத்த ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் வீழ்ந்தது. உள்ளூர் வீரர்களின் திறன் ஒருங்கிணைக்கப்படாதது அணியின் பலவீனமாக மாறி உள்ளது. பேட்டிங்கில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்குகின்றனர்.
இவர்களை தவிர்த்து நம்பிக்கை அளிக்கக்கூடியவராக ரிஷப் பந்த் மட்டுமே திகழ்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிக்கி புயி இரு ஆட்டத்திலும் சோபிக்கவில்லை. பஞ்சாப் அணிக்கு எதிராக 3 ரன்கள் மட்டுமே சேர்த்த ரிக்கி புயி, ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரன் கணக்கை தொடங்கும் முன்னரே நடையை கட்டினார். முதல் ஆட்டத்தில் மட்டையை சுழற்றிய இஷான் போரல், அடுத்த ஆட்டத்தில் ஏமாற்றம் அளித்தார். ஆல்ரவுண்டரான அக்சர் படேலிடம் இருந்தும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை.
மிட்செல் மார்ஷ் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினாலும் விரைவிலேயே விக்கெட்டை பறிகொடுப்பது பலவீனமாக உள்ளது.ரிஷப் பந்தும் பொறுமை இல்லாமல் மட்டையை சுழற்றுவது அணிக்கு பாதகமாக மாறி உள்ளது. டாப் ஆர்டர் பேட்டிங்கை சமநிலைப்படுத்தும் விதமாக இன்றைய ஆட்டத்தில் டேவிட் வார்னருடன் பிரித்வி ஷா களமிறங்கக்கூடும். இது நிகழ்ந்தால் மிட்செல் மார்ஷ் 3-வது வீரராக களமிறங்குவார்.
பந்து வீச்சில் பலவீனம்: டெல்லி அணியின் பந்து வீச்சும் பலம் இல்லாமல் காணப்படுகிறது. காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள வேகப்பந்து வீச்சாளரான அன்ரிச் நோர்க்கியாவிடம் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல் திறன் வெளிப்படவில்லை. அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் ரன் குவிப்பை ஓரளவு கட்டுப்படுத்தினாலும் தேவையான தருணங்களில் விக்கெட்களை கைப்பற்றி திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுப்பவர்களாக திகழாதது பலவீனத்தை அதிகரித்துள்ளது.
ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அனைத்து துறையிலும் மேம்பட்ட திறனை வெளிப்படுத்த வேண்டும்.
சிஎஸ்கே ஆதிக்கம்: ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இதுவரை 29 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் சிஎஸ்கே 19 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணி 10 வெற்றியை பதிவு செய்துள்ளது. கடைசியாக மோதிய 4 ஆட்டங்களிலும் சிஎஸ்கே அணியே வெற்றி கண்டுள்ளது. இதில் இரு ஆட்டங்களில் டெல்லி அணி முறையே 77 மற்றும் 91 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இருந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
35 mins ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago