நடப்பு ஐபிஎல் சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கியது. எப்போதும் போலவே ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மீது ரசிகர்களின் கவனம் அதிகம் உள்ளது. அதேநேரத்தில் வழக்கத்துக்கு மாறாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீது ரசிகர்கள் வைக்கும் விமர்சனங்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ளது.
ஆடுகளம், சமூக வலைதளம் என எங்கு பார்த்தாலும் அது தென்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள், ஆதரவாளர்கள் என்று இல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அதனை ஒரே நேரத்தில் வெளிப்படுத்துவதே இதற்கு காரணம். இதனோடு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இணைந்து கொண்டு கேப்டன் ஹர்திக் குறித்த கருத்துகளை அள்ளி வீசுகின்றனர்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் இல்லை என்ற அறிவிப்பு வெளியான தருணத்தில் இருந்தே ஹர்திக் மீதான விமர்சனங்கள் பவுன்சர்களாக பாய்கின்றன. தற்போது அது உச்சத்தை எட்டி உள்ளது.
ஐந்து முறை பட்டம் வென்று கொடுத்த ரோகித், கேப்டன் இல்லை என்ற விரக்தியின் வெளிப்பாடு இது. இருந்தாலும் இந்த சீசனின் முதல் இரண்டு போட்டியிலும் மும்பை தோல்வியை தழுவியுள்ளது. அது ஹர்திக் மீதான விமர்சனங்களை நியாயப்படுத்துகிறது.
கேப்டன் ஹர்திக் சறுக்க காரணம் என்ன? - ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த 2022 சீசனில் புதிய அணியாக என்ட்ரியான குஜராத் டைட்டன்ஸ் அணியை கடந்த இரண்டு சீசன்களாக வெற்றிகரமாக வழிநடத்தியவர் ஹர்திக். முதல் முயற்சியில் சாம்பியன் பட்டமும், இரண்டாம் முயற்சியில் ரன்னர்-அப் ஆகவும் அணியை வழிநடத்தினார். அதில் கிடைத்த சக்சஸ் காரணமாக இந்திய டி20 அணியை வழிநடத்தும் பொறுப்பையும் கவனித்து வந்தார்.
இத்தகைய சூழலில் 17-வது ஐபிஎல் சீசனுக்கான ‘மினி’ ஏலத்துக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ட்ரேட் செய்யப்பட்டார். இந்த சீசனில் மும்பை அணியை அவரே வழிநடத்துவார் என்ற அறிவிப்பும் வெளியானது. அப்போதே விமர்சனம் எனும் கருமேகங்கள் மும்பை அணியை சூழ்ந்தது. இப்போது அது இடி, மின்னலுடன் அதிர்வேட்டு போடுகிறது. டிசம்பரில் நடந்த ஏலத்தில் தரமான வேகப்பந்து வீச்சாளர்களை மும்பை வாங்கி இருந்தது.
புதிய கேப்டன் தலைமையில் புதுப்பாய்ச்சலுடன் சீசனை தொடங்கிய மும்பை அணி, நடப்பு சீசனின் முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது. இதற்கு கேப்டன் ஹர்திக்கின் கள செயல்பாடுகளே காரணம். அதனை மறுப்பதற்கு இல்லை.
ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் பந்து வீச்சாளரான பும்ராவை சரியாக பயன்படுத்தாமல் இருந்தது. முக்கியமாக அவருக்கு முதல் ஸ்பெல் கொடுக்காமல் ஹர்திக் பாண்டியாவே பந்து வீசியது தப்புக் கணக்காக அமைந்துவிட்டது.
மும்பை அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளர்களில் ஒருவருமான பொல்லார்ட், “ஹர்திக் புதிய பந்தை ஸ்விங் செய்வார். அதனால் இந்த முடிவை எடுத்தோம். இதற்கு முன்னர் இந்திய அணிக்காகவும் இப்படி அவர் பந்து வீசியுள்ளார்” என தெரிவித்துள்ளார். ஆனால், அது மும்பைக்கு முதல் இரண்டு போட்டிகளில் கைகொடுக்கவில்லை.
மேலும், பேட்டிங் ஆர்டரில் ஒரு சில வீரர்களை தவிர யாரை எங்கு களம் இறக்குவது என்ற சரியான திட்டமிடல் ஹர்திக் வசம் அறவே இல்லை என தெரிகிறது. அதற்கு உதாரணம் குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான முதல் போட்டி. தனக்கு முன்பாக டிம் டேவிடை களம் இறக்கினார். அந்த இடத்தில் ஹர்திக் ஆடி இருந்தால் அந்த ஆட்டத்தின் முடிவே மும்பைக்கு சாதகமாக மாறி இருக்கக்கூடும். இதனை கிரிக்கெட் வல்லுநர்களும் குறிப்பிட்டு கருத்து சொல்லியுள்ளனர்.
ஹைதராபாத் அணியுடனான போட்டியில் முன்கூட்டியே களம் கண்டு மந்தமான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி நோக்கடித்தார். சுழற்சி முறையில் சரியான பவுலர்களை ஹர்திக் பயன்படுத்தி இருந்தால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மெகா ரன் வேட்டையை கொஞ்சம் கட்டுப்படுத்தியும் இருக்கலாம். இப்போதைக்கு இது சீசனின் தொடக்கம் தான். அடுத்து வரும் இரண்டு மாத காலத்துக்குள் இது அனைத்தையும் அவர் மாற்ற வேண்டும்.
ஒன்-மேன் ஷோ டு டீம் ஸ்பிரிட்: ஆடுகளத்தில் கேப்டன் என்ற முறையில் முடிவுகளை தன்னிச்சையாக எடுக்காமல் சக வீரர்களுடன் ஹர்திக் கலந்து பேச வேண்டியது அவசியம். முக்கியமாக 5 முறை பட்டம் வென்று கொடுத்த ரோகித்தின் அனுபவத்தை அவர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அணி வீரர்களின் பேச்சுக்கு அவர் கவனம் கொடுத்தால் அணியும் அவருக்கு கவனம் கொடுக்கும். கூடவே தனது செயல்கள் மற்றும் ஆட்டத்தை ஹர்திக் மேம்படுத்தவும் வேண்டும். அது நடந்தால் ஹர்திக் தலைமையிலான மும்பை அணி வெற்றிப் பாதைக்கு திரும்பும். அதன் மூலம் தன் மீதான நெகட்டிவ் இமேஜை அவர் கடந்து வரவும் முடியும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago