ஜெய்பூரில் நேற்று சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2024 தொடரின் 9-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுத்து ஒரு அபாரமான வெற்றி இன்னிங்ஸை தனி ஆளாக ஆடிய ரியான் பராக், இதுகாறும் தன் மீது பிறருக்கு இருந்த காழ்ப்புகளையும் ரசிகர்களின் தூற்றுதல்களையும் கரகோஷங்களாக மாற்றினார். அதுவும் கடும் ஃப்ளூ காய்ச்சலில் உடல்வலியினால் 3 நாட்கள் அவதிப்பட்ட ரியான் பராக் வலிநிவாரணி மருந்துகளையும் காய்ச்சல் எதிர்ப்பு மருந்துகளையும் எடுத்துக் கொண்டு நேற்று களமிறங்கினார்.
ரியான் பராக் கிரீசில் இறங்கி செட்டில் ஆகும் போது ராஜஸ்தான் அணி 7.2 ஓவர்களில் 36/3 என்று தடுமாறிக்கொண்டிருந்தது. அப்போது அஸ்வினும் இவரும் இணைந்து ஸ்கோரை 6.1 ஓவர்களில் 90 ரன்களுக்கு உயர்த்தினர். அஸ்வின், ஆன்ரிச் நார்ட்யேவை ஒரே ஓவரில் அடித்த 2 சிக்சர்களுடன் 19 பந்துகளில் 29 ரன்கள் என்ற சிறு அதிரடி இன்னிங்ஸை ஆடி ராஜஸ்தான் அணிக்கு புதிய தெம்பைக் கொடுத்தார்.
அதன்பிறகு துருவ் ஜுரெல் ( 20 ), ஷிம்ரன் ஹெட்மையர் ( 14 ) ஆகியோரை வைத்துக் கொண்டு ரியான் பராக் 45 பந்துகளில் 7 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என்று 84 ரன்களை விளாசி வீழ்த்த முடியாது இறுதி வரை நின்றார். கடினமான பிட்சில் நல்ல பவுலிங்குக்கு எதிராக ரியான் பராக் ஆடிய இந்த இன்னிங்ஸ் தோனி, கோலி உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்களின் வெகு சாதாரணமான இன்னிங்சை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் வர்த்தக விளம்பர இன்னிங்ஸ் அல்ல. மாறாக உண்மையிலேயே மிகச் சிறந்த டி20 இன்னிங்ஸ்.
பந்துகள் ஸ்விங் ஆகி யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்லரை விழுங்கிய பிறகு ரியான் பராக் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று கவனமாக ஆடினார். அதன்பிறகு 25 பந்துகளில் 65 ரன்களை விளாசினார் என்றால் சாதாரண மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் இல்லை இது. வர்ணனையில் சஞ்சய் மஞ்சுரேக்கர் சம்பந்தமில்லாமல் ‘வாங்கின காசுக்கு கூவுறார் பாரு’ என்று வடிவேலு ஜோக் ஒன்றில் வருவது போல் தோனியுடன் பராக் இன்னிங்ஸை ஒப்பிட்டார்.
மொத்தம் 252 ஐபிஎல் இன்னிங்ஸ்களை ஆடிய தோனி வெறும் 24 அரைசதங்களையே எடுத்துள்ளார். ஆனால் எந்த ஒரு அரைசதமும் நேற்று ரியான் பராக் ஆடிய நெருக்கடி நிலையில் ஆடப்பட்ட இன்னிங்ஸ்கள் அல்ல என்றுதான் கூற வேண்டும். நம்மவர்களுக்கு கிரிக்கெட்டே தோனியிலிருந்துதான் தொடங்கப்பட்டது போலும் கோலிதான் வழி மொழிந்தவர் போலும்! வர்ணனை என்ற புறவயமான வர்ணிப்பு என்பது தனிநபர் வழிபாடாகவும் புகழ்பாடலாகவும் மாறியதில் ஐபிஎல்-க்கு பெரும் பங்கு உண்டு.
முன்பெல்லாம் ரியான் பராக் மைதானத்தில் கொஞ்சம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுமாறு சிலபல நடத்தைகளில் ஈடுபட்ட போது அவரை கடும் கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்த ரசிகர்கள் இப்போது அவரை வாழ்த்திக்கொண்டிருக்கின்றனர். விராட் கோலி மைதானத்தில் எவ்வளவு அசிங்கமாக வேண்டுமானாலும் ஆட்டிட்யூட் காட்டலாம், ஆனால் ரியான் பராக் காட்டினால் போதும் உடனே பொங்கி விடுவார்கள் நம் நாயக வழிபாட்டு கோஷ்டி ரசிகர்கள். தன் மீது விழுந்த அத்தனை கற்களையும் இப்போது பூக்களாக மாற்றியிருக்கிறார் ரியான் பராக்.
முதலில் குல்தீப் யாதவை 13வது ஓவரில் புல்ஷாட்டில் சிக்ஸ் விளாசினார். அற்புதமாக வீசிய கலீல் அகமதுவின் அனாலிசிஸை காலி செய்யுமாறு 15வது ஓவரில் 6,4,4 என்று பின்னி எடுத்தார் ரியான். கடைசியில் நார்ட்யே ஓவரில் 25 ரன்கள் விளாசப்பட்டது. 14வது ஓவரில் 90 ரன்கள் என்று இருந்த ராஜஸ்தானை பராக் 185 ரன்களுக்கு அழைத்துச் சென்றார். அப்படியும் வெற்றி பெறும் ஸ்கோர்தான் இது என்று டெல்லி கேப்பிடல்ஸ் ஆடியது.
வார்னர் அச்சுறுத்தலாக ஆடி அதிகபட்ச ஸ்கோராஅக் 49 ரன்களை எடுத்தார். ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 23 பந்துகளில் 44 ரன்கள், ரிஷப் பண்ட் 26 பந்துகளில் 28 ரன்கள். ஆனாலும் 173/5 என்று முடிந்தது டெல்லி. நாந்த்ரே பர்ஜர் அபாரமாக கடும் வேகத்தில் வீசி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற யஜுவேந்திர செஹல் 3 ஓவர் 19 ரன் 2 விக்கெட் என்று அசத்த ஆவேஷ் கான் கடைசி ஓவரை அற்புதமாக வீச ராஜஸ்தான் 2வது வெற்றியைப் பதிவு செய்தது. ரியான் பராக் இரவானது நேற்று.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago