கேப்டனாக தடுமாறும் ஹர்திக் பாண்டியா

By பெ.மாரிமுத்து

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 2-வது தோல்வியை சந்தித்துள்ளது. விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பது இயல்பாக மாறி மாறி வரும் நிகழ்வுதான். ஆனால் ஒரு கேப்டனாக அணியை ஹர்திக் பாண்டியா சரியாக வழிநடத்துகிறாரா? என்ற கேள்விதான் அவர் மீது கணைகளாக தொடுக்கப்படுகிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் 36 பந்துகளில் வெற்றிக்கு 48 ரன்களே தேவையாக இருந்த நிலையில் அதைகூட மும்பை அணியால் எடுக்க முடியாமல் போனது. அந்த ஆட்டத்தில்பேட்டிங் வரிசையில் ஹர்திக் பாண்டியா 7-வது வீரராக களமிறங்கியதும் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக அமைந்தது.

இதுஒருபுறம் இருக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஜஸ்பிரீத் பும்ராவை, ஒரு கேப்டனாக ஹர்திக் பாண்டியா கையாண்ட விதத்தை புரிந்து கொள்ள முடியாததாகவே இருக்கிறது.

டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர்மும்பை அணியின் பந்து வீச்சை மைதானத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக விளாசினர். ஆனால் அவர்களை கட்டுப்படுத்த ஹர்திக் பாண்டியா எந்தவித திட்டங்களையும் செயல்படுத்தியதாக தெரியவில்லை. முதல் 3 ஓவர்களில் ஹைதராபாத் அணி 40 ரன்களை விளாசிய நிலையில் 4-வது ஓவரை வீசிய பும்ரா 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் பும்ராவை 12-வது ஓவர் வரை ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் பயன்படுத்தவில்லை.

உலக கிரிக்கெட் அரங்கில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான பந்து வீச்சை கொண்டுள்ள பும்ராவை சரியான இடத்தில் ஹர்திக் பாண்டியா பயன்படுத்தத் தவறியது ஏன்? என்ற கேள்விகளை கிரிக்கெட் விமர்சகர்களும், வர்ணனையாளர்களும் கேட்கத் தவறவில்லை. 12 ஓவர்களில் ஹைதராபாத் அணி 173 ரன்களை குவித்துவிட்ட பின்னர் பும்ராவை பாண்டியா கொண்டுவந்தார். ஆனால் அதன் பின்னர் எந்தவித மாயங்களும் நிகழ்த்த முடியவில்லை.

ஒருவேளை பும்ராவை முன்கூட்டியே பயன்படுத்தி இருந்தால் ஹைதராபாத் அணியின் ரன் குவிப்பை ஓரளவு கட்டுப்படுத்தி இருக்க முடியும். 30 ரன்கள் வரை கட்டுப்படுத்தியிருந்தால் கூட அது இலக்கை எட்டிப்பிடிக்க மும்பை அணிக்கு உதவியிருக்கும். தென் ஆப்பிரிக்காவில் யு-19 அணியில் விளையாடிய குவேனா மபகா மீது வைத்த நம்பிக்கையை கூடவா பும்ரா மீது வைக்க முடியவில்லை என்ற விமர்சனங்களும் பாண்டியா மீது எழாமல் இல்லை.

அனுபவமே இல்லாத குவேனா மபகா 4 ஓவர்களை வீசி 66 ரன்களை தாரை வார்த்தார். அவரது பந்து வீச்சு ஒவ்வொரு முறையும் சிதைவுக்குஉட்படுத்தப்பட்டது. எனினும் அவருக்கு 4 ஓவர்களை முழுமையாக பாண்டியா வழங்கினார். இதுபோதாதென்று கடைசி ஓவரையும் அனுபவம் இல்லாத சுழற்பந்து வீச்சாளரான ஷம்ஸ் முலானிக்கு வழங்கி ஹைதராபாத் அணி சிரமம் இல்லாமல் சாதனை படைக்கும் அளவிலான ஸ்கோரை குவிக்க ஒருவகையில் வழியை ஏற்படுத்திக் கொடுத்தார் பாண்டியா.

278 ரன்கள் இலக்கு துரத்தப்பட்ட நிலையில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், நமன் திர் ஆகியோர் 200-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் அதிரடியாக விளையாடினார்கள். திலக் வர்மாவின் ஸ்டிரைக் ரேட் 188 ஆக இருந்தது. ஆனால் ஹர்திக் பாண்டியாவோ 120 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினார். 10.5-வது ஓவரில் களமிறங்கிய அவர், அதிரடியாக விளையாட வேண்டிய கட்டத்தில் 20 பந்துகளை சந்தித்து 24 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அவரது மந்தமான பேட்டிங் இலக்கை துரத்துவதில் பெரிய அளவிலான தேக்க நிலையை உருவாக்கியது.

முக்கியமாக புவனேஷ்வர் குமார் வீசிய 13-வது ஓவர்தான் ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை உருவாக்கியது. இந்த ஓவரில் 5 பந்துகளை சந்தித்த ஹர்திக் பாண்டியா வெறும் 4 ரன்களே எடுத்தார். மும்பைஅணியை தோல்வியின் பிடியில் சிக்கவைத்த முக்கியமான ஓவராக இது அமைந்தது. இதன் பின்னர் பாட் கம்மின்ஸ் வீசிய 15-வது ஓவரை ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட் ஆகியோர் கூட்டாக வீணடித்தனர். இந்த ஓவரின் தொடக்கத்தில் திலக் வர்வா வெளியேறிய நிலையில் எஞ்சிய 5 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

30 பந்துகளில் 93 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் 16-வது ஓவரை வீசிய ஜெயதேவ் உனத்கட், டிம் டேவிட்டை சோதித்தார். இந்த ஓவரில் 4 பந்துகளை சந்தித்த டிம் டேவிட் 2 ரன்களையே எடுத்தார். அதேவேளையில் பாண்டியா 2 பந்தில் 2 ரன்கள் சேர்த்தார். இந்த 3 ஓவர்களில் மும்பை அணியால் கூட்டாக13 ரன்களே எடுக்க முடிந்தது. இதுவே ஆட்டத்தில் பெரிய அளவிலான வித்தியாசத்தை ஏற்படுத்தியது. பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவதில் தடுமாற்றம் அடைந்த ஹர்திக் பாண்டியா அந்த குறையை பேட்டிங்கின் போது சரி செய்துகொள்ளத் தவறினார்.

ரன் ரேட் தேவையை கருத்தில் கொண்டு அவர், அதிரடியாக விளையாடத் தவறியதும் மும்பை அணியின் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக அமைந்தது. தொடர்ச்சியான இரு தோல்விகள், தலைமைப் பண்பு மீது வைக்கப்படும் விமர்சனங்கள் ஆகியவற்றில் இருந்து ஹர்திக் பாண்டியா மீண்டு வருவது என்பது சவாலாக மாறி உள்ளது. மும்பை அணி தனது சொந்த மைதானத்தில் வரும் 1-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் ஹர்திக் பாண்டியாவுக்கு கூடுதல் நெருக்கடியை தரக்கூடும்.

கடந்த இரு சீசன்களிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டது போன்ற தோற்றம் இருந்தது. ஆனால் அவரை, பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா திறம்பட வழிநடத்தி இருந்தார். ஷுப்மன் கில், ரித்திமான் சாஹா, சாய் சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல்டெவாட்டியா ஆகியோர் பேட்டிங்கில் பெரிய அளவில் பங்களிப்பை வழங்கினர். பந்து வீச்சில்மோஹித் சர்மா, முகமது ஷமி ஆணிவேராக திகழ்ந்தனர். இவர்களுடன் ரஷித் கான், நூர் முகமது பலம் சேர்த்தனர். ஒட்டுமொத்த அணியும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் வெற்றிகளை குவித்தது சாத்தியமானது.

ஆனால் மும்பை அணியின் கலாச்சாரம் வித்தியாசமானது. ஒரு ஆல்ரவுண்டராக இதற்கு முன்னர் அந்த அணியுடன் ஹர்திக் பாண்டியா சிறப்பாகவே இருந்தார். ஆனால் தற்போது கூடுதலாக கேப்டன் பொறுப்பும் இணைந்துள்ளது. அதற்கு தகுந்தவாறு அவர், தன்னை தயார்படுத்திக் கொள்ள சிறிது காலம் ஆகக்கூடும். இது புறம் இருக்க அனுபவம் வாய்ந்த ரோஹித் சர்மாவுடன் ஆலோசித்து செயல்பட்டாலே சிறந்த பலன்களை ஹர்திக் பாண்டியா அறுவடை செய்ய முடியும். ஆனால் அது களத்தில் இதுவரை நிகழ்ந்ததாகவே தெரியவில்லை என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்