கிராண்ட்மாஸ்டராகிறார் அரவிந்த் சிதம்பரம்: ஸ்பான்சரின்றி தவிக்கும் சதுரங்க ராஜா

By ஏ.வி.பெருமாள்

இந்திய செஸ்ஸின் வருங்கால ஆனந்த் என எல்லோராலும் கணிக்கப்பட்டிருப்பவர் சென்னையைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம். 14 வயதான இவர் கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கான 3-வது “நார்ம்ஸை” பெற்றிருக்கிறார். தற்போதைய நிலையில் 2496 இ.எல்.ஓ. ரேட்டிங் புள்ளிகளுடன் இருக்கும் அவர் இன்னும் 4 ரேட்டிங் புள்ளிகளைப் பெறும்பட்சத்தில் கிராண்ட்மாஸ்டராகிவிடுவார்.

கிராண்ட்மாஸ்டர் பட்டம் வெல்வதற்கு 3 “நார்ம்ஸ்”களைப் பெற வேண்டும். அதன்படி முதல் இரு “நார்ம்ஸ்”களை முறையே சென்னை ஓபன் கிராண்ட்மாஸ்டர் போட்டி, மலேசியாவில் நடைபெற்ற கோலாலம்பூர் சர்வதேச ஓபன் போட்டிகளின் மூலம் கடந்த ஆண்டு பெற்றார் அரவிந்த்.

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற 4-வது சர்வதேச செஸ் ஃபெஸ்டிவல் ஓபன் போட்டியின் கடைசிச் சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த லத்வியாவைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான அலெக்ஸி ஷிரோவை வீழ்த்தியதன் மூலம் 3-வது “நார்ம்ஸை” பெற்றிருக்கிறார் பள்ளி மாணவரான அரவிந்த். இதுதவிர இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடியதன் மூலம் 29 இ.எல்.ஓ. ரேட்டிங் புள்ளிகளையும் பெற்றிருக்கிறார்.

தற்போது 3 “நார்ம்ஸ்”களை பெற்றிருப்பதன் மூலம் கிராண்ட்மாஸ்டர் தகுதியை எட்டியிருக்கிறார். கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெறுவதற்கு 2,500 இ.எல்.ஓ. ரேட்டிங் புள்ளிகளை வைத்திருக்க வேண்டும். தற்போது 2,496 ரேட்டிங் புள்ளிகளை வைத்துள்ள அரவிந்த், இன்னும் 4 புள்ளிகளை பெறும் பட்சத்தில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றுவிடுவார்.

உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனின் தீவிர ரசிகனான அரவிந்த், கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலக செஸ் போட்டியின்போது நடைபெற்ற கிராண்ட்மாஸ்டர் ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றபோது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார். அதன்பிறகு தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்த அரவிந்த் 10 மாதத்தில் 3 “நார்ம்ஸ்”களைப் பெற்றிருக்கிறார்.

ஸ்பான்சரின்றி தவிப்பு

இது தொடர்பாக அரவிந்த் சிதம்பரத்தின் பயிற்சியாளரும், ஆலோசகருமான கிராண்ட்மாஸ்டர் ஆர்.பி.ரமேஷிடம் கேட்டபோது, “6 மாதத்தில் கிராண்ட்மாஸ்டராகும் திறமையை அரவிந்த் பெற்றிருந்தபோதிலும், நிதி பிரச்சினையால் அவரால் சாதிக்க முடியாமல் போனது. எனினும் இப்போது அவர் கிராண்ட்மாஸ்டருக்கான தகுதியை எட்டியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

சமீபத்தில் முருகப்பா குழுமம் அவருக்கு ஸ்பான்சர் செய்தது. அதனால் இப்போது லத்வியா சென்று 3-வது “நார்ம்ஸை” பெற்றிருக்கிறார். 3 வயதிலேயே தந்தையை இழந்த அரவிந்த், ஏழ்மையான பின்னணியைக் கொண்டவர் என்பதால் அவரால் உலகம் முழுவதிலும் நடைபெறும் முக்கிய செஸ் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. அவருக்கு தேவையான நிதியை திரட்டுவதற்காக அவருடைய தாய் போராடி வருகிறார்.

முதல் 50 இடம்

அரவிந்துக்கு இப்போது எவ்வித கட்டணமுமின்றி பயிற்சியளிக்கிறோம். ஆனால் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளுக்கு அவரை அனுப்பும் சக்தி எங்களுக்கு இல்லை. வெளிநாட்டுக்கு சென்று போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 2 அல்லது 3 லட்சம் செலவாகிறது. எனவே அவருக்கு ஸ்பான்சர்கள் கிடைத்தால் சர்வதேச அளவில் நடைபெறும் ஏராளமான போட்டிகளில் பங்கேற்க வசதியாக இருக்கும். அப்படி பங்கேற்கும்

பட்சத்தில் அவர் நிச்சயம் ஜொலிப்பார். தற்போதைய நிலையில் அவரை சர்வதேச தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் முன்னேற்றுவதை இலக்காக கொண்டுள்ளேன்.

லேப்-டாப் தேவை

இதற்கு முன்னர் இந்தியாவில் கொனேரு ஹம்பி, ஹரிகிருஷ்ணன் ஆகியோர் 15 வயதில் கிராண்ட்மாஸ்டராகியி ருக்கிறார்கள். இப்போது அந்த வரிசையில் அரவிந்த் சிதம்பரம் இணையவிருக்கிறார். அவருக்கு கிராண்ட்மாஸ்டர் பட்டம் வழங்கப்பட்டுவிட்டால், சில சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

எல்லா செஸ் வீரர்களுக்குமே பயிற்சி பெறுவதற்கு லேப்-டாப் மிக முக்கியமானதாகும். ஆனால் அரவிந்தின் லேப்-டாப் மிகவும் பழசாகிவிட்டது. அவருக்கு ஒரு புது லேப்-டாப் இருந்தால் பயிற்சி பெறுவதற்கு வசதியாக இருக்கும்” என்றார்.

புதிய சாதனையை நோக்கி

மிக இளவயதில் (11 வயது) தேசிய ஜூனியர் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற பெருமைக்குரியவரான அரவிந்த் சிதம்பரம், இப்போது தமிழகத்தின் இளம் கிராண்ட்மாஸ்டர் என்ற சாதனையை நெருங்கியிருக்கிறார். தமிழகத்தின் இளம்கிராண்ட்மாஸ்டர் என்ற சாதனையை ஆரம்பத்தில் முன்னாள் உலக சாம்பியனான ஆனந்த் வைத்திருந்தார்.

அதை அதிபன் தனது 18-வது பிறந்த நாளுக்கு முன்னதாக தகர்த்தார். ஆனால் சேதுராமன் தனது 17-வது வயதில் சாம்பியன் ஆனதன் மூலம் அதிபனின் சாதனையை முறியடித்தார். இப்போது அரவிந்த் தனது 15-வது வயதில் கிராண்ட்மாஸ்டராகி சேதுராமனின் சாதனையை முடிவுக்கு கொண்டு வர காத்திருக்கிறார். அவருக்கு பெரிய அளவில் ஸ்பான்சர்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலக செஸ்ஸுக்கே இன்னொரு ஆனந்த் கிடைப்பார் என நம்பலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்