RCB vs PBKS | கோலி அபாரம் + தினேஷ் கார்த்திக் அதிரடி; ஆர்சிபி முதல் வெற்றி!

By செய்திப்பிரிவு

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் 6-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்தப் போட்டியில் ஆர்சிபி வீரர் விராட் கோலி 49 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அசத்தினார். அதிரடியாக ஆடி இருந்தார் தினேஷ் கார்த்திக்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஷிகர் தவன் 45, பிரப்சிம்ரன் 25, லிவிங்ஸ்டோன் 17, சாம் கரன் 23, ஜிதேஷ் சர்மா 27 மற்றும் ஷஷாங் சிங் 21 ரன்கள் எடுத்தனர். 8 பந்துகளில் 21 ரன்களை எடுத்திருந்தார் ஷஷாங். ஆர்சிபி சார்பில் சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விரட்டியது. கேப்டன் டூப்ளசி மற்றும் விராட் கோலி இன்னிங்ஸை தொடங்கினர். முதல் ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசி இருந்தார் கோலி. அந்த ஓவரில் கோலியின் கேட்ச் வாய்ப்பை ஸலிப் ஃபீல்டர் பேர்ஸ்டோ நழுவ விட்டிருந்தார். டூப்ளசி 3 ரன்களில் வெளியேறினார். கேமரூன் கிரீனும் 3 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

ரஜத் பட்டிதார் மற்றும் கோலி இணைந்து 43 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பட்டிதார் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல்லும் 3 ரன்னில் அவுட் ஆனார். 49 பந்துகளில் 77 ரன்கள் எடுத்த கோலியை வெளியேற்றினார் ஹர்ஷல் படேல்.

அனுஜ் ராவத் 11 ரன்னில் வெளியேறினார். அதன் பின்னர் தினேஷ் கார்த்திக் மற்றும் மஹிபால் லோம்ரோர் இணைந்து 48 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர் அது பெங்களூரு அணிக்கு வெற்றி கூட்டணியாக அமைந்தது. தினேஷ் கார்த்திக், 10 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். லோம்ரோர், 8 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது ஆர்சிபி. இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை கோலி வென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE