வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.
டுமினி தலைமையிலான இந்த இளம் தென் ஆப்பிரிக்க அணியில் முக்கிய, பிரபல வீரர்கள் இடம்பெறவில்லை.
ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்காவை நசுக்கிய நம்பிக்கையை டி20-க்குக் கடத்திய இந்திய அணி முதலில் பேட் செய்ய, பேட்டர்சன் வீசிய முதல் ஓவர் ஷார்ட் பிட்ச் பந்து வீச்சாக அமைய ரோஹித் சர்மா 2 சிக்சர்கள் 1 பவுண்டரி விளாச முதல் ஓவரிலேயே 18 ரன்கள் என்ற அதிரடி தொடக்கம் கண்டது. 9 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் ரோஹித் சர்மா 21 ரன்கள் எடுத்து ஜூனியர் டாலாவின் எழும்பிய பந்தை கொஞ்சம் ஒதுங்கிக் கொண்டு கட் ஆட முய்ன்றார் எட்ஜ் ஆனது, தானாகவே போயிருக்க வேண்டும், நடுவர் நாட் அவுட் என்று கூற நப்பாசையில் நின்றார், ஆனால் தென் ஆப்பிரிக்கா ரிவியூ செய்ய பெரிய எட்ஜ் என்பது தெரியவந்தது, இந்தியா 23/1.
ஷிகர் தவணுக்கு தொடக்கத்தில் ஒரு பந்து கிளவ்வில் பட்டு லெக் திசையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது, அவர் மட்டும்தான் அப்பீல் செய்தார், ஆனால் அந்த அப்பீலும் கூட லெக் திசை வைடு என்று நடுவர் சிக்னல் செய்யாமல் இருக்க எழுப்பிய முறையீடு போல் தோன்றியதால் ரிவியூ செய்யாமல் விட்டனர் ரிவியூ செய்திருந்தால் தவன் அவுட் ஆகியிருப்பார்.
3-ம் நிலையில் சுரேஷ் ரெய்னா களமிறக்கப்பட்டார், அவரை சுதந்திரமாக ஆடக் கூறியிருப்பார்கள் போலிருக்கிறது, ஒதுங்கிக் கொண்டு போகிற வருகிற பந்துகளை எல்லாம் இலக்கில்லாமல் சுழற்றினார். 7 பந்துகளில் 15 ரன்கள், இதில் 2 பவுண்டரிகள் ஒரு சிக்ஸ் உண்டு, கடைசியில் ஜூனியர் டாலா பந்தை ஒரு சுற்று சுற்றி கொடியேற்ற டாலாவே கேட்ச் பிடித்தார். 49/2 .
மறுமுனையில் ஷிகர் தவண் அனாயசமாக ஆடினார், அருமையாக ஆடினார். கீப்பர் தலைக்கு மேல் எட்ஜ் ஷாட்களுடன் அபாரமான பிளிக்குகள், கட்கள் புல்கள் என்று வெளுத்துக் கட்டினார். தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சில் சாமர்த்தியமான மாற்றங்கள் இல்லை, ஷார்ட் பிட்ச் பந்துகள் அதிகம் இருந்தன, இதனால் 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 78 ரன்கள் எடுத்து விட்டது.
விராட் கோலி இறங்கி, ஷம்ஸி பந்தை நேராக மிட் ஆன் பீல்டர் பெஹார்டீன் கையில் அடித்தார், அவர் கையில் வந்த கேட்சை அதிர்ச்சிகரமாக கோட்டை விட்டார், கோலி சிரித்துக் கொண்டேயிருந்தார், எப்போதும் போல் கேட்சை விட்ட அடுத்த பந்து பவுண்டரிக்குப் பறந்தது, பிறகு ஒருபிரமாதமான நேர் சிக்ஸ் ஒன்றை அடித்தார் விராட் கோலி. 20 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த அவர் ஷம்சியின் சுழலில் எல்.பி.ஆனார். ரிவியூ பயனளிக்கவில்லை. 108/3. ஷிகர் தவண் 27 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் அரைசதம் எடுத்தார். ஷிகர் தவண் 14வது ஓவரில் 2 லெக் திசை பவுண்டரியை அடிக்க இந்திய அணி 15வது ஓவரின் தொடக்கத்தில் 150 ரன்களுக்குச் சென்றது. ஷிகர் தவண் 39 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 72 ரன்கள் எடுத்து பெலுக்வயோவின் வேகம் குறைக்கப்பட்ட பந்தை பெடல் ஸ்வீப் முறையில் ஆடும்போது விக்கெட் கீப்பர் கிளாசனிடம் லெக் திசையில் கேட்ச் ஆனார்.
தவண் போன பிறகே இந்திய அணி அடிக்க முடியாமல் திணறியது, கடைசி 5 ஓவர்களில் 46 ரன்கள்தான் வந்தது. மணீஷ் பாண்டே 27 பந்துகள் ஆடி ஒரேயொரு சிக்ஸ் மட்டுமே அடித்து 29 ரன்களை எடுத்தார், வாய்ப்புகள் அளிக்கப்படாததால் திணறினார். தோனி 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வைடு யார்க்கரை எதிர்பார்த்து நகர்ந்து ஆட முற்பட்டார், ஆனால் இம்முறை பந்து லெக் ஸ்டம்பில் பிட்ச் ஆகி பவுல்டு ஆனது. ஹர்திக் பாண்டியா 7 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 203 ரன்கள் எடுத்தது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் இடது கை ஸ்பின்னர் ஸ்மட்ஸ் 2 ஓவர்களில் 14 ரன்கள் என்று சிக்கன வீச்சாளராகத் திகழ்ந்தார். ஜூனியர் டாலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், பெலுக்வயோவுக்கு 2 ஓவர்கள்தான் தரப்பட்டன அதில் அவர் 16 ரன்கள் கொடுத்து ஷிகர் தவனை வெளியேற்றினார்.
புவனேஷ்வர் குமாரிடம் மடிந்த தென் ஆப்பிரிக்கா!
கடந்த 4 டி20 போட்டிகள் இதே மைதானத்தில் இலக்கை விரட்டிய அணிக்குச் சாதகமாக இருந்த அடிப்படையில் தென் ஆப்பிரிக்க அணி தொடங்கியது இலக்கை விரட்டுவதற்கான லின் நோக்கமாகவே தெரிந்தது. ரீஸா ஹென்ரிக்ஸ் (70), ஸ்மட்ஸ் (12) அதிரடியில் முதல் 15 பந்துகளில் 28 ரன்கள் வந்தது. ஆனால் புவனேஷ்வர் குமார் பந்தை நன்றாக ஸ்விங் செய்ததோடு, தினுசு தினுசான ஸ்லோ பந்துகளை வீசினார் விரல் மூலம் பந்தை டெலிவரி செய்து கடும் சோதனைகளை அளித்து ஸ்மட்ஸ், டுமினி ஆகியோரை வீழ்த்த இந்திய அணி ஆதிக்க வழிக்குத் திரும்பியது. புவனேஷ்வர் குமார் தன் வேகத்தில் செய்த மாற்றங்களை தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. அபாய வீரர் டேவிட் மில்லர் ஒரு சிக்சருடன் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் இன்னொரு ஸ்லோ பந்தில் கேட்ச் ஆகி வெளியேற 6.2 ஓவர்களில் 48/3 என்று ஆனது தென் ஆப்பிரிக்கா.
ஆனால் அதன் பிறகு பர்ஹான் பெஹார்டீன், ஹென்றிக்ஸ் உண்மையான சவால்களை அளித்தனர் இவர்கள் இருவரும் சுமார் 9 ஓவர்களில் 81 ரன்கள் விளாசினர். கோலிக்கு கேட்சை விட்ட பெஹார்டீன் 27 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 39 எடுத்து சாஹலின் மெதுவான பந்தில் லாங் ஆனில் கேட்ச் ஆனார். ஆனால் ஹென்றிக்ஸ், கிளாசன் அடுத்த 2 ஓவர்களில் 25 ரன்கள் விளாசினர். இதனால் வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 50 ரன்கள் தேவையான போது 6 விக்கெட்டுகள் கையில் இருந்தன.
ஆனால் புவனேஷ்வர் குமார் புகுந்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார், 18 வது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் புவனேஷ்வர் 2 விக்கெட்டுகளை வீழ்த்த பேட்டர்சன் பாண்டியா, தோனி கூட்டணியில் ரன் அவுட் ஆக 20வது ஓவர் முடிவில் 175 ரன்களுடன் முடிந்தது தென் ஆப்பிரிக்கா. ஹென்ரிக்ஸ் அதிகபட்சமாக 50 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார்.
புவனேஷ்வர் குமார் 4 ஒவர்கள் 24 ரன்களுக்கு 5 விக்கெட் என்று டி20 சிறந்த பந்து வீச்சை நிகழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார், டி20 தொடரிலும் இந்தியா 1-0 என்று முன்னிலை பெற்றது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago