ஹைதராபாத்தை 4 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா - ரஸ்ஸல் ஆட்டநாயகனாக தேர்வு! @ ஐபிஎல் 2024

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை நான்கு ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீழ்த்தியது. இந்த போட்டியில் 25 பந்துகளில் 64 ரன்கள் விளாசிய ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி, பவுலிங் தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஃபில் சால்ட், 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

எனினும் சுனில் நரேன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா என அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தன. தமிழக வீரரான நடராஜன் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். எட்டாவதாக களமிறங்கிய ஆண்ட்ரே ரஸ்ஸல் தனது அதிரடியால் ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

மூன்று ஃபோர் மற்றும் ஏழு சிக்ஸர்கள் என அபாரமாக ஆடி 25 பந்துகளில் 64 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் ரஸ்ஸல். இதன் மூலம் இதன் மூலம் இந்த ஐபிஎல் சீசனில் 200 ரன்களை எடுத்த முதல் அணி என்ற பெருமையை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் பெற்றது.

இறுதியாக 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 207 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து 208 ரன்கல் என்ற இலக்குடன் பேட்டிங் இறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக மயங்க அகர்வால் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தலா 32 ரன்கள் என நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அடுத்தடுத்து இறங்கிய ராகுல் திரிபாதி 20 ரன்களும், எய்டன் மார்க்ரம் 18 ரன்களும் எடுத்த நிலையில், அடுத்து இறங்கிய ஹெய்ன்ரிச் 29 பந்துகளுக்கு 63 ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்தார். ஹெய்ன்ரிச் அடித்த சிக்சர்கள் மட்டுமே 8.

கடைசி 2 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஐந்தாவது பந்தில் அவர் சிக்ஸ் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார் கிளாசன். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 25 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த கொல்கத்தா அணி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE