பாண்டே, தோனி அரைசதங்கள் வீண்: கிளாசன் அதிரடி, டுமினி உறுதியில் தெ.ஆ. வெற்றி

By ராமு

செஞ்சூரியனில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் கிளாசன், டுமினி ஆகியோரது ஆட்டத்தினால் இந்தியாவின் 188 ரன்களை வெற்றிகரமாக விரட்டி தென் ஆப்பிரிக்க அணி தொடர் சமன் செய்யும் வெற்றியை ஈட்டியது.

டாஸில் வென்ற தென் ஆப்பிரிக்காவின் விருப்பப்படி முதலில் பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்ததற்கு 188 ரன்களையே எடுத்தது, தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 18.4 ஓவர்களில் 189/4 என்று வெற்றி பெற்றது. கேப்டன் ’டுமீல்’ டுமினி உனாட்கட் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை அடித்து வெற்றி ரன்களை எட்டினார்.

கிளாசன் 30 பந்துகளில் 3 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 69 ரன்கள் என்று சீற, டுமினி 40 பந்துகளில் 4 பவுண்டரிகல் 3 சிக்சர்களுடன் 64 நாட் அவுட் என்று கடைசி வரை ஆடி வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டார். அவர் 4 ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

ரிஸ்ட் ஸ்பின்னர் சாஹல் நேற்று ரிஸ்க் ஸ்பின்னர் ஆனார், 4 ஓவர்களில் 7 சிக்சர்களுடன் 64 ரன்களைக் கொடுத்து டி20-யில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த இந்திய பவுலர் என்ற ‘பெருமை’யை ஈட்டினார்.

முன்னதாக மழை காரணமாக ஆட்டம் மூன்றரை மணி நேரம் தாமதமாகத் தொடங்கி இந்திய நேரம் இரவு 9.30 மணிக்குத்தான் தொடங்கியது.

மணீஷ் பாண்டே, தோனி அரைசதங்களில் மீண்ட இந்திய அணி:

முதல் டி20 போல் இந்திய அணி இறங்கியவுடனேயே ஒரு ‘அக்கறையற்ற புறக்கணிப்பு' (careless abandon) மனோபாவத்துடன் அடித்து ஆடத் தொடங்கியது. அப்புறம் எப்படி கிறிஸ் மோரிஸ் மெய்டன் வீசினார் என்று கேட்கலாம், ஷிகர் தவண் மேற்கூறிய அக்கறையற்ற புறக்கணிப்பு மனோபாவத்தில் இரண்டு பந்துகளை சுற்றிப்பார்த்தார் மாட்டவில்லை, கொஞ்சம் ஸ்விங்கும் இருந்ததால் முதல் ஓவரில் ரன் இல்லை. ஜூனியர் டாலா ரோஹித் சர்மாவை டக் அவுட் செய்தார். ஃபுல் லெந்தில் வீசி பந்தை உள்ளே கொண்டு சென்றார், மிடில் ஸ்டம்பில் வாங்கி பிளம்ப். ரிவியூவை விரயம் செய்யவில்லை. கோல்டன் டக் ஆனார் ரோஹித்.

ஆனால் அதன் பிறகு இந்திய அணியை நெரிக்கும் பந்து வீச்சைச் செய்யவில்லை, ஷார்ட் பிட்ச் உத்திக்கு மாற தவணும், சுரேஷ் ரெய்னாவும் புகுந்தனர். மோரிஸ் வீசிய 2வது ஓவர், ஆட்டத்தின் 3வது ஓவரில் 20 ரன்கள் வந்தது. 14 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் அதிரடி காட்டிய தவன் 24 ரன்களில் டுமினியின் புல்டாஸை மிட் ஆனில் கேட்ச் கொடுத்து ஏமாற்றமளித்தார்.

டாலா ஒரு பந்தை குத்தி எழுப்ப கூடுதல் பவுன்ஸ் விராட் கோலிக்கு எப்பவுமே சிக்கல் கொடுப்பது போல் இம்முறையும் கிளவ்வில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது, மிக மிக அரிதான ஒரு மிகக்குறைந்த ரன் எண்ணிக்கையான ஒன்றில் அவுட் ஆனார் கேப்டன் விராட் கோலி. பவர் பிளே முடிவில் 45/3. ரெய்னா, பாண்டே நிதானித்தனர், இவர்கள் கூட்டணியின் முதல் 3 ஓவர்களில் பவுண்டரியே வரவில்லை. பிறகு மணீஷ் பாண்டே பொங்கி எழுந்தார், தப்ரைஸ் ஷம்ஸி 10வது ஓவரை வீச மணீஷ் பாண்டே லெக் திசையில் சில சக்தி வாய்ந்த ஷாட்களில் 19 ரன்களை விளாசினார்.

சுரேஷ் ரெய்னா 24 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து பெலுக்வயோ பந்தை லெக் திசையில் அடிக்கும் முயற்சியில் தோல்வியடைந்து எல்.பி.ஆகி வெளியேறினார், ஆனால் ரெய்னா, பாண்டே ஜோடி 31 பந்துகளில் மேலும் 45 ரன்களைச் சேர்த்தன.

தோனி களமிறங்கினார், வந்தவுடனேயே இறங்கி வந்து ஸ்மட்ஸ் பந்தை நேர் சிக்ஸருக்குத் தூக்கினார். தோனி, பாண்டே இணைந்து 56 பந்துகளில் 98 ரன்களைச் சேர்த்தனர். இதில் கடைசி 5 ஓவர்களில் 55 ரன்கள் விளாசப்பட்டது.

கிட்டத்தட்ட சந்தீப் பாட்டீல் பேட்டிங்கை நினைவூட்டும் மணீஷ் பாண்டேயின் லெக் திசை ஷாட்டுக்கு வாகாக தென் ஆப்பிரிக்கா ஷார்ட்டாகவோ ஃபுல் ஆகவோ வீச 33 பந்துகளில் அரைசதம் கண்ட பாண்டே பிறகு 6 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 48 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். தோனி கடைசி 2 ஓவர்களில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களை விளாசினார். இதில் டேன் பேட்டர்சனை பின் காலில் சென்று கவர் பவுண்டரியில் அடித்த ஷாட் அற்புதம். 28 பந்துகளில் தோனி 52 நாட் அவுட். 88வது டி20 போட்டியில் தோனியின் 2வது அரைசதமாகும் இது.

சாஹலை புரட்டிய கிளாசன், டுமினி உறுதி:

189 ரன்கள் வெற்றி இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு விரும்பத்தக்க தொடக்கம் கிடைக்கவில்லை, ஸ்மட்ஸ் திணறி 9 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து உனாட்கட்டின் வேகம் குறைந்த பந்துக்கு ரெய்னாவிடம் கவரில் கேட்ச் ஆனது. டுமினி களமிறங்கினார். ஹென்ரிக்ஸ் 5 பவுண்டரிகளை அடித்து 17 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த போது தாக்கூர் வீசிய ஸ்லோயர் பந்துக்கு டீப் ஸ்கொயர் லெக்கில் பாண்டியாவிடம் கேட்ச் ஆனார். 38/2 என்ற நிலையில் தென் ஆப்பிரிக்காவை தோல்வி துரத்துகிறது என்றுதான் தோன்றியது.

ஆனால் சற்றும் எதிர்பாராமல் கிளாசனை 4-ம் நிலையில் களமிறக்கினர். 90 பந்துகளில் 151 ரன்கள் தேவை. என்ன மூடில் இறங்கினார் என்று தெரியவில்லை, உங்களுக்கு மட்டும்தான் அக்கறையற்ற புறக்கணிப்பு பேட்டிங் வருமா? எங்களுக்கு வராதா? என்று அறிவுறுத்துமாறு உனாட்கட்டை இரண்டு புல் ஷாட் சிக்சர்களுடன் அதிரடியைத் தொடங்கினார். பிறகு சாஹல் வந்தவுடன் லாங் ஆனில் மிகப்பெரிய சிக்சருடன் அவரை வரவேற்றார்.

10வது ஓவர் முடியும் போது தென் ஆப்பிரிக்கா ரன் விகிதம் 9 ரன்களுக்கு கீழ் இருந்தது வெற்றிக்குத் தேவைப்படும் ரன் விகிதம் 10க்கும் மேல். அப்போதுதா மீண்டும் சாஹல் சிக்க அவரை கவரில் ஒரு சிக்ஸரையும் பிறகு அதே ஓவரில் மட்டையை இடது கையில் மாற்றிக் கொண்டு பாயிண்டின் மேல் ஒரு அரக்க சிக்சரையும் அடித்தார், இது அற்புதமான ஷாட், சாஹல் அதிர்ச்சியடைந்தார், கிளாசன் மேல் கொஞ்சம் பயமும் ஏற்பட்டது. மொத்தம் 5 சிக்சர்கள் 1 பவுண்டரியுடன் கிளாசன் அசத்தினார்.

சாஹலுக்கு நேற்று நேரமும் சரியில்லை, பந்தும் சரியில்லை, அவரது 3வது ஓவரில் மீண்டும் கிளாசன் 2 சிக்சர்களையும் ஒரு பவுண்டரியையும் அடித்து சிங்கிள் எடுத்து டுமினியிடம் ஸ்ட்ரைக்கைக் கொடுக்க அவர் ஸ்லாக் ஸ்வீப்பில் சாஹலை மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்து அவரது வெந்த புண்ணில் ஈட்டியை விட்டு ஆட்டினார்.

உனாட் கட் பந்து வீச வர அவரது ஆஃப் கட்டரை கிளாசன் தோனியிடம் கேட்ச் கொடுத்து 30 பந்துகளில் 3 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் மேட்ச் வின்னிங் 69 ரன்களுடன் வெளியேறினார். டேவிட் மில்லர் பொறுப்பற்ற ஷாட் ஒன்றில் பாண்டியாவிடம் சடுதியில் வெளியேற இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு லேசாக எட்டிப்பார்த்தது. சாஹல் அந்த அடியிலும் ஒரு பந்தை ஏமாற்ற டுமினி லெக் திசையில் பீட் ஆக தோனி ஸ்டம்பிங் வாய்ப்பை நழுவ விட்டார். டுமினி அப்போது 40. மீண்டும் சாஹல் பெஹார்டீனுக்கு தன் பந்து வீச்சில் தனக்கே வந்த கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டார். பெஹார்டீனும் தன் பங்குக்கு ஒரு சிக்ஸ் வெளுத்து 16 ரன்கள் எடுக்க ஜெயதேவ் உனாட்கட் ஓவரில் 2 சிக்சர்களை தொடர்ச்சியாக அடித்து டுமீல் டுமினி வெற்றிக்கு இட்டுச் சென்றார், தொடர் 1-1 சமன்.

உனாட்கட் 3.4 ஓவர்களில் 42 ரன்களுக்கு 2 விக்கெட் இவர் 4 சிக்சர்களை கொடுக்க சாஹல் 7 சிக்சர்கள் வாங்கப்பட்டார். ஆட்ட நாயகன் விருது ஹெண்ட்ரிக் கிளாசன் தட்டிச் சென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்