‘ஒரே ஒரு தோனிதான்’ - துருவ் ஜூரெல் வெளிப்படை பேச்சு

By செய்திப்பிரிவு

மும்பை: கிரிக்கெட் உலகில் ஒரே ஒரு தோனிதான். அவரது சாதனையை யாராலும் நெருங்க முடியாது என இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரெல் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், துருவ் ஜூரெலின் ஆட்டத்தை தோனியுடன் ஒப்பிட்டு ‘அடுத்த தோனியாக இவர் உருவெடுப்பார்’ என பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

23 வயதான அவர் அண்மையில் முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ராஜ்கோட் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டார். முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் 46 ரன்கள் எடுத்தார். ராஞ்சியில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் முறையே 90 மற்றும் 39* (நாட்-அவுட்) எடுத்திருந்தார். அது இந்திய அணியின் வெற்றிக்கு உதவி இருந்தது. அந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றிருந்தார்.

நெருக்கடியான நிலையில் அபாரமாக ஆடிய அவரது ஆட்டத்தை தோனியுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார் வர்ணனை பணியை கவனித்த கவாஸ்கர். பின்னர் தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கமும் கொடுத்திருந்தார்.

“தோனி சார் உடன் என்னை ஒப்பிட்டு பேசியதற்காக கவாஸ்கர் சாருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், தோனி சார் களத்தில் படைத்த சாதனைகளை எந்தவொரு வீரராலும் நெருங்க கூட முடியாது. இது எனது தனிப்பட்ட கருத்து. அவர் மகத்தான வீரர்.

அதனால் இங்கு ஒரே ஒரு தோனிதான். அது அவர் மட்டும்தான். நான் துருவ் ஜூரெல். நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்” என ஜூரெல் தெரிவிதித்துள்ளார். அவரது வாட்ஸ்அப் முகப்பு படத்தில் தோனியை வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE