‘சிறந்த தலைமை பண்பை கொண்டவர் ரோகித்’ - இக்கட்டான சூழலில் உதவியது குறித்து அஸ்வின் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கடந்த பிப்ரவரி 16-ம் தேதி இரவு இங்கிலாந்து அணிக்கு எதிரான ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி, சென்னை திரும்பி இருந்தார் அஸ்வின். அவரது தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அந்த இக்கட்டான தருணத்தில் தனக்கு அணியின் கேப்டன் ரோகித் சர்மா, உதவியது குறித்து இப்போது அஸ்வின் நினைவுகூர்ந்துள்ளார்.

“நான் அம்மாவை பார்த்து விட்டு வரலாம் என நினைத்திருந்தேன். மருத்துவர்கள் அவரை பார்க்க முடியாத என சொல்லி இருந்தார்கள். என்னால் அதை தாங்க முடியவில்லை. கலங்கி நின்றேன். சென்னை திரும்ப விமான டிக்கெட் புக் செய்ய முயன்றேன். ஆனால், ராஜ்கோட்டில் மாலை 6 மணிக்கு மேல் விமானம் ஏதும் இல்லை என தெரிந்தது.

நான் என்ன செய்வது என புரியாமல் நின்றேன். அப்போது எனது ரூமுக்கு ரோகித் மற்றும் ராகுல் திராவிட் வந்திருந்தனர். நான் யோசித்துக் கொண்டிருந்ததை பார்த்த ரோகித், ‘என்ன யோசிக்கிற. முதல்ல நீ கிளம்பு. குடும்பத்தோடு இருப்பதுதான் சரியான விஷயம். நான் சார்ட்டர் ஃபிளைட் ஏற்பாடு செய்யுறேன்’ என சொன்னார். அதற்கான வேலையை உடனே செய்தார் அவர்களது பேச்சு எனது சிந்தனையை மாற்றியது.

அப்போது ஒன்று யோசித்தேன். நானே ஒருவேளை கேப்டனாக இருந்து, அணியின் வீரர் இந்த நிலையில் இருந்தால் குடும்பத்தினரை போய் பார்த்துவிட்டு வர சொல்வேன். ஆனால், அந்த வீரர் என்ன செய்கிறார். எப்படி இருக்கிறார். துணையாக ஒருவரை அனுப்புவது எல்லாம் நம்பமுடியாத செயல். அந்த நாளில் ரோகித்துக்குள் இருக்கும் ஆகச்சிறந்த தலைமைப் பண்பை நான் பார்த்தேன்.

பல ஆண்டுகளாக பல்வேறு கேப்டன்களுடன் நான் விளையாடி உள்ளேன். ஆனால், ரோகித் வசம் ஏதோ ஒன்று உள்ளது. அந்த பெரிய மனசு இருக்குற காரணத்துனால தான் அவரால் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல முடிந்தது என நினைக்கிறேன். தோனிக்கு நிகரான சாதனை. அது அவ்வளவு எளிய காரியம் அல்ல. தோனியும் நிறைய பண்ணுவார். ஆனால், ரோகித் அதற்காக கூடுதல் முயற்சியை போடுகிறார்” என அஸ்வின் தெரிவித்துள்ளார். இதனை சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் சாதனையை அஸ்வின் படைத்திருந்தார். ராஜ்கோட் போட்டியில்தான் இந்த சாதனை படைக்கப்பட்டது. தொடர்ந்து தரம்சாலாவில் நடைபெற்ற போட்டி அவரது 100-வது டெஸ்ட் போட்டியாக அமைந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE