WPL 2024 | பிளே-ஆஃப் சுற்றில் ஆர்சிபி... மும்பையை பந்தாடிய ‘வொண்டர் வுமன்’ எல்லிஸ் பெர்ரி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நடப்பு மகளிர் பிரீமியர் லீக் சீசனின் 19-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதன் மூலம் பிளே-ஆஃப் சுற்றுக்கு மூன்றாவது அணியாக ஆர்சிபி முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில் பவுலிங் மற்றும் பேட்டிங் என ஆல்ரவுண்ட் பர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தி இருந்தார் ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி.

புதுடெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மும்பை அணி 19 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எல்லிஸ் பெர்ரி, அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். 4 ஓவர்களில் வெறும் 15 ரன்களை மட்டுமே அவர் கொடுத்திருந்தார். சாஜனா, நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஹர்மன்ப்ரீத், அமெலியா கெர், அமன்ஜோத், பூஜா ஆகியோரது விக்கெட்களை அவர் கைப்பற்றி இருந்தார்.

114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆர்சிபி விரட்டியது. அந்த அணியின் டாப் ஆர்டரில் ஆடிய மூன்று பேர் விரைந்து ஆட்டமிழந்தனர். இருந்தும் எல்லிஸ் பெர்ரி மற்றும் ரிச்சா கோஷ் இடையே அபார பார்ட்னர்ஷிப் அமைந்தது. இருவரும் 76 ரன்களை அந்த கூட்டணியில் சேர்த்தனர். அதன் மூலம் ஆர்சிபி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிளே-ஆஃப் சுற்றுக்கு அந்த அணி முன்னேறி உள்ளது.

ரிச்சா 28 பந்துகளில் 36 ரன்களும், எல்லிஸ் பெர்ரி 38 பந்துகளில் 40 ரன்களும் எடுத்திருந்தனர். 15 ஓவர்களில் இலக்கை எட்டி இருந்தது. இந்தப் போட்டியில் பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை எல்லிஸ் பெர்ரி வென்றார். கடந்த போட்டியில் டெல்லி வசம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தது ஆர்சிபி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE