அலெக்ஸ் கேரி, மிட்செல் மார்ஷ் அசத்தல்: 2-வது டெஸ்டிலும் ஆஸி. வெற்றி

By செய்திப்பிரிவு

கிறைஸ்ட்சர்ச்: நியூஸிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 162 ரன்களும், ஆஸ்திரேலியா 256 ரன்களும் எடுத்தன. 94 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி 3-வதுநாள் ஆட்டத்தில் 108.2 ஓவர்களில் 372 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 82, டாம் லேதம் 73, டேரில்மிட்செல் 58 ரன்கள் சேர்த்தனர்.

இதையடுத்து 279 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 24 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் 9, உஸ்மான் கவாஜா 11, மார்னஷ் லபுஷேன் 6, கேமரூன் கிரீன் 5 ரன்களில் நடையை கட்டினர். டிராவிஸ் ஹெட் 17, மிட்செல் மார்ஷ் 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கைவசம் 6 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு மேற்கொண்டு 202 ரன்கள் தேவை என்ற நிலையில் நேற்று4-வது நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து விளையாடியது.

டிராவிஸ் ஹெட் 18 ரன்களில் டிம் சவுதி பந்தில் ஆட்டமிழந்தார். 80 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அலெக்ஸ் கேரி, மிட்செல் மார்ஷுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை அருமையாக கட்டமைத்தார். மிட்செல் மார்ஷ் 54 பந்துகளிலும், அலெக்ஸ் கேரி 60 பந்துகளிலும் அரை சதம் கடந்தனர். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் முதல் செஷனில் ஆஸ்திரேலிய அணி ஓவருக்கு சராசரியாக 5 ரன்கள் என்ற கணக்கில் 19 ஓவர்களில் 97 ரன்கள் சேர்த்தது.

சிறப்பாக பேட் செய்து வந்த மிட்செல் மார்ஷ் 102 பந்துகளில், 10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 80 ரன்கள் எடுத்த நிலையில் பென் சீயர்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அலெக்ஸ் கேரியுடன் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்தார் மிட்செல் மார்ஷ். இதையடுத்து களமிறங்கிய மிட்செல் ஸ்டார்க் ரன் ஏதும்எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அப்போது ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு மேற்கொண்டு 59 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் கைவசம் 3 விக்கெட்கள் மட்டுமே இருந்தன. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும் கேப்டன் பாட் கம்மின்ஸுடன் இணைந்து 8-வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி கோட்டை கடக்க வைத்தார் அலெக்ஸ் கேரி. முடிவில் ஆஸ்திரேலிய அணி 65 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அலெக்ஸ்கேரி 123 பந்துகளில், 15 பவுண்டரிகளுடன் 98 ரன்களும் பாட் கம்மின்ஸ் 44 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 32 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்டதொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. ஆட்ட நாயகனாக அலெக்ஸ் கேரி தேர்வானார். தொடர் நாயகனாக நியூஸிலாந்து அணியின் மேட் ஹென்றி தேர்வு செய்யப்பட்டார். அவர், இந்தத் தொடரில் மட்டை வீச்சில் 101 ரன்கள் சேர்த்திருந்தார். அதேவேளையில் பந்து வீச்சில் 17 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

தப்பித்த மார்ஷ்… கிறைஸ்ட்சர்ச் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4-வது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்ட நிலையில் டிம் சவுதி வீசிய 2-வது ஓவரின் முதல் பந்தில் மிட்செல் மார்ஷ் ஆட்டமிழப்பதில் இருந்து தப்பித்தார். பாயின்ட் திசையில் அவர், அடித்த பந்தை ரச்சின் ரவீந்திரா பிடிக்காமல் தவறவிட்டார். அந்த நேரத்தில் மிட்செல் மார்ஷ் 28 ரன்களே சேர்த்திருந்தார். அப்போதே நியூஸிலாந்தின் வெற்றி பறிபோனதாக உணரப்பட்டது.

31 வருட சோகம்... நியூஸிலாந்து அணி தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடைசியாக கடந்த 1993-ம்ஆண்டு ஆக்லாந்து போட்டியில் வெற்றி கண்டிருந்தது. தொடர்ச்சியான தோல்விகளுக்கு இம்முறையாவது நியூஸிலாந்து அணி முற்றுப்புள்ளி வைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இம்முறையும் அந்த அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 31 வருடங்களாக நியூஸிலாந்து அணியின் வெற்றி தாகம் தொடர்கிறது.

2-வது இடம்: நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 என வென்றதன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி சராசரி 59.09-ல் இருந்து 62.50 ஆக அதிகரித்து 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. அதேவேளையில் தொடரை இழந்ததால் நியூஸிலாந்து அணியின் வெற்றி சராசரி 60-ல் இருந்து 50 ஆக குறைந்து 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்