WPL 2024 | ரிச்சா கோஷ் அதிரடி; ஆர்சிபி அதிர்ச்சி தோல்வி - பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய டெல்லி!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 17-வது லீக் போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை கடைசி பந்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது டெல்லி கேபிடல்ஸ். இந்தப் போட்டியில் ஆர்சிபி அணியின் வீராங்கனை ரிச்சா கோஷ், 29 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ், 58 ரன்கள் மற்றும் அலைஸ் கேப்ஸி 48 ரன்கள் எடுத்தனர். ஷ்ரேயங்கா பாட்டீல், ஆர்சிபி அணிக்காக அபாரமாக பந்து வீசினார். கடைசி ஓவரில் 2 விக்கெட்களை வீழ்த்தி 5 ரன்களை கொடுத்திருந்தார்.

182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இளக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விரட்டியது. அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இருந்தும் சோஃபி மோலினக்ஸ், எல்லிஸ் பெர்ரி, சோஃபி டெவைன் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் குவித்தனர். ரிச்சா கோஷ் 29 பந்துகளில் 51 ரன்கள் விளாசி இருந்தார். ஜார்ஜியா 12 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது. அதோடு பிளே ஆஃப் சுற்றுக்கும் அந்த அணி தகுதி பெற்றுள்ளது

கடைசி ஓவர்: ஆர்சிபி வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. ஓவர் முழுவதும் ரிச்சா கோஷ் ஸ்ட்ரைக்கில் இருந்தார். முதல் பந்தில் சிக்ஸ் விளாசினார். அடுத்த பந்து டாட். அதற்கு அடுத்த பந்தில் 1 ரன்னை நிறைவு செய்த நிலையில் ரன் அவுட் ஆனார் திஷா. நான்காவது பந்தில் 2 ரன்களும், ஐந்தாவது பந்தில் சிக்ஸரும் விளாசினார். கடைசி பந்தில் ஆர்சிபி வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், ரிச்சா ரன் அவுட் ஆனார். அதனால் டெல்லி வெற்றி பெற்றது.

சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், களத்தில் கலங்கி நிற்க அவருக்கு இரு அணி வீராங்கனைகளும் ஆறுதல் சொல்லி இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE