எம்ஆர்எஃப் பேஸ் அறக்கட்டளையில் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: திறமையான இளம் வேகப்பந்து வீச்சாளர்களை கண்டறிவதற்காக எம்ஆர்எஃப் பேஸ் அறக்கட்டளை நாடு முழுவதும் ‘ஏஸ் ஆஃப் பேஸ்' நிகழ்வை நடத்தியது. கொல்கத்தா, மும்பை, டெல்லி, சென்னை ஆகிய 4 நகரங்களில் நடத்தப்பட்ட தேர்வுகளில் இருந்து தலா 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இறுதிக்கட்ட தேர்வு சென்னையில் நேற்று (9-ம் தேதி) நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் மாநிலம் கங்கா நகரைச் சேர்ந்த ஜஸ்கரன் சிங், பிஹார் மாநிலம் பிர்பூரைச் சேர்ந்த முகமது இசார், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த முகமது சர்ஃப்ராஜ் ஆகிய 3 பேர் இறுதியாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரும், எம்ஆர்எஃப் அறக்கட்டளையின் இயக்குநரும், முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான கிளென்மெக்ராத் மற்றும் தலைமை பயிற்சியாளர் எம்.செந்தில்நாதன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் எம்ஆர்எஃப் பேஸ் அறக்கட்டளையில் இலவசமாக பயிற்சிபெற அனுமதிக்கப்படுவார்கள்.

எம்ஆர்எஃப் பேஸ் அறக்கட்டளையின் இயக்குநர் கிளென் மெக்ராத் கூறுகையில், “இந்தியாவில் உள்ள இளம் பந்துவீச்சாளர்கள் முறையான பயிற்சி இல்லாமலேயே தங்கள் திறமையையும், வேகத்தையும் சிறப்பாக வெளிப்படுத்துகின்றனர். இதைபார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. இவர்கள் கிரிக்கெட் பயணத்தில் தங்களது முழுதிறனையும் உணர்ந்து கொள்வதற்கு உதவி செய்வதை நான் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளேன்” என்றார். எம்ஆர்எஃப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகுல்மம்மன், தலைமை பயிற்சியாளர் எம்.செந்தில்நாதன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE