4-1 என தொடரை வென்று இங்கிலாந்தை ஓடவிட்ட இந்தியா: அஸ்வின் 100-வது டெஸ்டில் அசத்தல்

By செய்திப்பிரிவு

தரம்சாலா: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதன்மூலம் 5 போட்டிகள் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா.

தரம்சாலாவில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்பின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 477 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 259 ரன்கள் முன்னிலை பெற்றது. 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 120 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 473 ரன்கள் குவித்த நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது.

தொடங்கிய மூன்று ஓவர்கள் மட்டுமே ஆட்டம் நீடித்தது. 30 ரன்கள் எடுத்திருந்த குல்தீப் யாதவ்வை ஜேம்ஸ் ஆண்டர்சன் விக்கெட்டாக்கினார். 20 ரன்கள் எடுத்திருந்த பும்ராவை பஷிர் அவுட் ஆக்க இந்தியாவின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. பின்னர் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியபோது முதுகுவலி காரணமாக கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக களமிறங்கவில்லை. ரோகித்துக்கு பதிலாக துணை கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா இந்திய அணியை வழிநடத்தினார்.

அஸ்வின் உடன் இணைந்து பும்ரா இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். புதிய பந்தை அஸ்வினிடம் கொடுத்து இன்னிங்ஸை தொடங்கிய பும்ராவின் முடிவுக்கு நல்ல பலன் கிடைத்தது. 259 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து இரண்டாவது ஓவரிலேயே பென் டக்கெட் விக்கெட்டை இழந்துள்ளது. அந்த ஓவரை வீசியது அஸ்வின்தான்.

தொடர்ந்து 103 ரன்களை எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்களை இழந்தது இங்கிலாந்து. இதில் இங்கிலாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நான்கு பேரை அஸ்வின் வீழ்த்தினார். பென் ஸ்டோக்ஸ் 2 ரன், ஆலி போப் 19 ரன்கள், ஸாக் கிராலி 0, பென் டக்கெட் 2 ரன்கள், போக்ஸ் 8 ரன்கள் என 5 விக்கெட் வீழ்த்தினார். அஸ்வினுக்கு இது 100வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

குல்தீப் யாதவ் தன் பங்கிற்கு அதிரடியாக ஆடி 39 ரன்கள் எடுத்திருந்த ஜானி பேர்ஸ்டோவை வீழ்த்தினார். இதனால், 6 விக்கெட்டை இழந்து இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடியது.

இங்கிலாந்தின் பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். எனினும், ஜோ ரூட் பொறுமையை கடைபிடித்தார். 128 பந்துகளைச் சந்தித்து 84 ரன்கள் எடுத்தார். அவர் ஒருபக்கம் நிதானமாக ஆடினாலும், மறுபக்கம் விக்கெட் சரிவை ஏற்படுத்தினர் இந்திய பவுலர்கள். ஒருகட்டத்தில் 84 ரன்களில் ஜோ ரூட்டும் விக்கெட்டை பறிகொடுக்க, இங்கிலாந்தின் கதை முடிவுக்கு வந்தது. இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது.

இதன்மூலம் 5 போட்டிகள் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா சாதனை படைத்தது. ஜெய்ஸ்வால் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE