முற்றிலுமாக சரணடையும் இங்கிலாந்து: இனி 2, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரே போதும்!

By ஆர்.முத்துக்குமார்

தரம்சாலா: இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவிலும் சரி, இங்கிலாந்திலும் சரி 5 டெஸ்ட் போட்டிகளை நடத்துவது சுவாரஸ்ய குறைவை தோற்றுவிக்கிறது. இந்தியா அங்கு சென்றால் நன்றாக ஆடி வெல்ல முயற்சி செய்கின்றனர். ஆனால், இங்கிலாந்து இங்கு வந்தால் அப்படியே முற்றிலுமாக சரணடைந்து விடுகின்றனர்.

எந்த வித ஃபைட்டும் இல்லை, ஒன்றும் இல்லை. இத்தனைக்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றனர். ஆனால் அதே உத்வேகத்தையும் ரிதத்தையும் மற்ற டெஸ்ட் போட்டிகளுக்கு அவர்களால் கடத்த முடியவில்லை. உடல் மொழி தொய்வாகி விடுகின்றது. இந்திய அணியா... வெல்லவே முடியாது என்ற முகபாவனையை அந்த வீரர்கள் காட்டத் தொடங்கி விடுகின்றனர். இது டெஸ்ட் தொடரை ஒருதலைப்பட்சமாக்கி பார்ப்பதற்கு மிகவும் சோர்வூட்டுவதாக உள்ளது.

பேட்டிங் பிட்சில் இதுவரை இல்லாத அளவுக்கு 434 ரன்கள் வித்தியாசத்தில் நடப்புத் தொடரில் தோல்வி அடைந்தது. இப்போது தரம்சலா டெஸ்ட் போட்டியில் காற்றிலும், களத்திலும் பந்துகள் ஒன்றுமே ஆகாமல் சவம் போல் வரும் பிட்சில்கூட 175/3 என்ற நிலையில் இருந்து 218 ரன்களுக்குள் சுருண்டனர். இப்போது ரோகித் சர்மா, கில் இருவரும் சதமெடுக்க 275/2 என்று இந்திய அணி மாபெரும் வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. விக்கெட்டுகளை எடுக்க இங்கிலாந்தில் ஆளில்லை. அஸ்வின் சதமெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படிப்பட்ட மட்டை பிட்சில் 218 ரன்களுக்குச் சுருள்கின்றனர் என்றால், அந்த அணி 5 டெஸ்ட் போட்டிகள் ஆடும் தொடருக்குத் தகுதியானதுதானா என்ற கேள்வி எழுகிறது.

இந்தத் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அபாரமாக வென்றாலும், தரம்சலாவில் நிச்சயம் இன்னொரு உதை வாங்கி 4-1 என்று தொடரை இழக்கப் போகின்றனர். ஜோ ரூட் கேப்டன்சியில் கடந்த முறை வந்த போது சென்னையில் முதல் டெஸ்ட்டில் வென்றனர். பிறகு எந்த ஒரு போராட்ட குணமும், எதிர்த்து எழும்பும் தன்மையும் இல்லாமல் 4-1 என்று மடிந்தனர்.

உண்மையில் 2012 தொடரில் இங்கிலாந்து இங்கு வந்து 2-1 என்று தொடரை வென்ற போது கிராம் ஸ்வான், மாண்ட்டி பனேஸர் ஆகிய இரு ஸ்பின்னர்கள் இந்திய பிட்ச்களை இந்திய பவுலர்களை விடவும் அருமையாகப் பயன்படுத்தினர். அதேபோல், இங்கிலாந்து பேட்டர்களில் அலிஸ்டர் குக், கெவின் பீட்டர்சன், ட்ராட், பெல், ரூட் அட்டகாசமாக ஆடினர். விக்கெட் கீப்பர் மேட் பிரையர் பயனுள்ள பங்களிப்புகளைச் செய்தார்.

அந்தத் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் அகமதாபாத்தில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி தொடரில் 1-0 என்று முன்னிலை வகித்தது. ஆனால் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் வான்கடேயில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், ஈடன் கார்டனில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வென்று முன்னிலை வகித்தது. கடைசி டெஸ்ட் டிரா ஆக தோனி கேப்டன்சியில் இந்தியாவில் இந்திய அணி இங்கிலாந்திடம் டெஸ்ட் தொடரில் தோல்வி கண்டது. அதோடு சரி அதன் பிறகு ஒரு அணி கூட இந்தியாவில் தொடரை வெல்ல முடியவில்லை. ஒரு தொடர் வெற்றிச் சாதனையில் இருந்து வருகிறது இந்திய அணி.

நடப்பு டெஸ்ட் தொடர் பாஸ்பால் தொடர் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இங்கிலாந்தின் பாஸ்பால் முதல் டெஸ்ட்டில் கைகொடுக்க அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் பல்லிளித்தது. இங்கிலாந்திடம் நல்ல ஸ்பின் பவுலர்கள் இருந்தும், ஸ்டோக்ஸ் போன்ற உத்வேகமான, திறமையான கேப்டன் இருந்தும் இங்கிலாந்தினால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை என்பதோடு தோல்வி அடைந்த விதம் இங்கிலாந்து என்ற பெரிய கிரிக்கெட் அணிக்கு பெருமை சேர்ப்பதாக அமையவில்லை என்பதே.

மேலும் பார்வையாளர்கள், ரசிகர்கள் பார்வையிலிருந்து பார்த்தோமானால் எந்தவித போராட்டமும் இன்றி, மீட்டெழுதலும் இன்றி இங்கிலாந்து முற்றிலுமாக சரணடைந்து ஆடும் ஆட்டத்தை ஒரு கிரிக்கெட் ரசிகனாக பார்க்க சகிக்கவில்லை என்றே கூற வேண்டும். இந்திய அணியின் ஒற்றை ஆதிக்கம் இந்தியாவின் கிரிக்கெட்டை மட்டுமே நேசிக்கும் ரசிகர்களுக்கு பெருமையளிப்பதாக இருக்கலாம். ஆனால் ஒரு கிரிக்கெட் தொடர் சமபலத்துடன், சமவாய்ப்புகளை வழங்கும் சாதிக்கும் தொடராக இருப்பதுதான் எந்த ஒரு விளையாட்டையும் தக்கவைக்கும் சமநிலையாகும்.

இந்திய அணி பல விமர்சனங்களுக்குப் பிறகு இங்கிலாந்தில் தங்கள் ஆட்டத்தைப் பிரமாதமாக உயர்த்த, இங்கிலாந்து இங்கு வந்து ஆடும் தங்கள் ஆட்டத்திறனை வளர்த்துக் கொள்ளவே இல்லை. தொடர் தோல்விகள் அதைத்தான் காட்டுகின்றன அல்லது திறமைகள் இருந்தும், பாஸ்பால், பூஸ்பால் என்று பூச்சாண்டி காட்டி காத்திறக்கப்பட்ட பந்தாகிவிடுகின்றனர்.

இங்கிலாந்து அணியினர் நல்ல பயணகர்த்தாக்கள் அல்லர் என்று கூறப்படுவதுண்டு. வெளியே வந்தால் உதைவாங்கிக் கொண்டு செல்வார்கள் என்பதுதான் அவர்கள் பற்றிய கதையாடலாக இருந்து வருகிறது. ஆனால் பென் ஸ்டோக்ஸ் கொஞ்சம் ஃபைட் காட்டினார். ஆனால் அதுவும் பெரிய அளவில் இல்லை. 5 டெஸ்ட் போட்டிகள் ஆடும் அளவுக்கு இந்தியாவில் இங்கிலாந்து தாங்காது என்பதையே அவர்களது தோல்வி முறைகள் காட்டுகின்றன.

இங்கிலாந்தும் தாங்காது, ரசிகர்களும் தாங்க மாட்டார்கள். ஏனெனில் ஒரு தலைபட்சமாய், ஒற்றை ஆதிக்கமாய் ஆடப்படும் ஆட்டத்தில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது. ஏதோ தளர்ந்து, துவண்டு போன வெஸ்ட் இண்டீஸ் இப்படி ஆடுகிறது, இலங்கை இப்படி ஆடுகின்றது என்றால் ஒப்புக் கொள்ளலாம். ஆனால் இங்கிலாந்து இப்படி ஆடுவது சகிக்கவில்லை.

இந்தியாவில் 14 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளனர். 22-ல் தோல்வி. 28 போட்டிகள் ட்ரா ஆகியுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் 131 டெஸ்ட்களில் 50-ல் வென்று இங்கிலாந்துதான் ஆட்சி செலுத்தி வருகிறது. ஆனால் அந்த ஒரு ஆதிக்கத் தன்மை அந்த அணியிடம் இல்லை. சொங்கியாக ஆடுகின்றனர்.

எனவே இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2 அல்லது 3 டெஸ்ட்களாகக் குறைத்து, மீதமுள்ள ஸ்லாட்டில் ஆப்கானிஸ்தானுடனோ, அயர்லாந்துடனோ டெஸ்ட் போட்டிகளில் ஆட ஐசிசியின் எஃப்டிபி மாற்றியமைக்கப்பட வேண்டும்.

ஸ்டீவ் வாக் கேப்டன்சி செய்த காலத்தில் ஆஸ்திரேலியாவிடம் இப்படித்தான் இங்கிலாந்து உதை மேல் உதை வாங்கிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் இயன் சாப்பல் கூறியதாவது, ‘இங்கிலாந்துக்கு 2 டெஸ்ட்கள்தான் கொடுக்கப்பட வேண்டும். அதற்கு அவ்வளவுதான் தகுதி, மாற்றாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகளை அதிகம் அழைக்க வேண்டும்’ என்று அப்போதே கூறினார். இதைத்தான் இப்போது நாமும் கூறுகிறோம். 5 டெஸ்ட் போட்டிகள் ஆட இங்கிலாந்து அணிக்கு தகுதியோ, வலுவோ கிடையாது. 2 அல்லது 3 டெஸ்ட் போட்டிகள்தான் சரியானது. இதன் மூலம் மற்ற விளிம்பு நிலை அணிகளுக்கு வாய்ப்புகள் அதிகமாக்கப்பட வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்