குல்தீப், அஸ்வின் சுழலில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து: இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்ப்பு

By செய்திப்பிரிவு

தரம்சாலா: இந்திய அணிக்கு எதிரான கடைசிமற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோரது அபாரமான பந்து வீச்சில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தரம்சாலாவில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிராவ்லி சீரான தொடக்கம் கொடுத்தார். அதேவேளையில் மறுமுனையில் பென் டக்கெட் நிலைத்து நின்று விளையாடினார். 18 ஓவர்களில் 64 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார்.

பென் டக்கெட் 58 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தை லெக் திசையில் அடிக்க முயன்றார். ஆனால் பந்து மட்டை விளிம்பில் பட்டு உயரமாக கவர் திசையை நோக்கி செல்ல ஷுப்மன் கில் விரைவாக ஓடிச் சென்று டைவ் அடித்து கேட்ச் செய்தார். இதன் பின்னர் ஆலி போப் களமிறங்கினார்.

ஸாக் கிராவ்லி 64 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் தனது14-வது அரை சதத்தை கடந்தார். மறுமுனையில் நிதானமாக செயல்பட்ட ஆலி போப் 11 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். மதிய உணவு இடைவேளையில் இங்கிலாந்து அணி 25.3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 100 ரன்கள் சேர்த்திருந்தது. ஸாக் கிராவ்லி 61 ரன்களுடன் களத்தில் இருந்தார். உணவு இடைவேளைக்கு பின்னர் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி குல்தீப் யாதவ் சுழலில் ஆட்டம் கண்டது.

ஸாக் கிராவ்லி 108 பந்துகளில், ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் போல்டானார். தனது 100-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ விரைவாக ரன்கள் சேர்க்க முயன்றார். மட்டையை சுழற்றிய அவர், 18 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

நட்சத்திர பேட்ஸ்மேனான ஜோ ரூட் 56 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ரன் ஏதும் எடுக்காத நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார்.

இதன் பின்னர் எஞ்சிய 4 விக்கெட்களையும் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் சீரான இடைவெளியில் வேட்டையாடினார். டாம் ஹார்ட்லி (9), மார்க் வுட் (0), பென் போக்ஸ் (29), ஜேம்ஸ் ஆண்டர்சன் (0) ஆகியோர் அஸ்வின் பந்தில் நடையை கட்டினர்.

முடிவில் இங்கிலாந்து அணி 57.4 ஓவர்களில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷோயிப் பஷிர் 11 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5, அஸ்வின் 4, ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 30 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் குவித்தது.

தனது 4-வது அரை சதத்தை விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் விளாசிய நிலையில் ஷோயிப் பஷிர் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். தனது 18-வது அரை சதத்தை விளாசிய ரோஹித் சர்மா 83 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 52 ரன்களும், ஷுப்மன் கில் 39 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 26 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கைவசம் 9 விக்கெட்கள் இருக்க 83 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 2-வது நாள்ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது இந்திய அணி.

4.1 ஓவர்களில் 4 விக்கெட்: தரம்சாலா டெஸ்ட் போட்டியில் அஸ்வின் முதல் 7 ஓவர்களில் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. ஆனால் அதன் பின்னர் வீசிய 4.1 ஓவர்களில் 4 விக்கெட்களை வீழ்த்தினார். பொதுவாக இன்னிங்ஸின் போது 5 விக்கெட்களை வீழ்த்திய பந்து வீச்சாளர் எதிரணி ஆட்டமிழந்ததும் மைதானத்தில் இருந்து வெளியே வரும் போது கையில் பந்தை உயர்த்தி காண்பித்தபடி செல்வது வழக்கம்.

ஆனால் தரம்சாலா போட்டியானது அஸ்வினுக்கு 100-வது ஆட்டம் என்பதால் குல்தீப் யாதவ் தான் 5 விக்கெட்கள் வீழ்த்திய போதிலும் அஸ்வினிடம் பந்தை கொடுத்தார். ஆனால் அவர், அதை வாங்கி மறுபடியும் குல்தீப் யாதவிடமே கொடுத்துவிட்டார். இறுதியில் குல்தீப் யாதவே பந்தை உயர்த்தி காண்பித்தபடி பெவிலியனை வந்தடைந்தார்.

ஜெய்ஸ்வால் 700 ரன்கள்: தரம்சாலா டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்கள் விளாசினார். இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு தொடரில் ஜெய்ஸ்வால் இதுவரை 712 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் தொடர் ஒன்றில் சுனில் கவாஸ்கருக்கு பிறகு 700 ரன்களுக்கு மேல் குவித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். க

வாஸ்கர் இரு முறை 700 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். 1971-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற தொடரில் கவாஸ்கர் 774 ரன்கள் வேட்டையாடி இருந்தார். இதன் பின்னர் 1978-79-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான உள்நாட்டு தொடரில் 732 ரன்கள் சேர்த்தார்.

விரைவாக ஆயிரம் ரன்கள்... 22 வயதான இந்திய அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தரம்சாலா டெஸ்ட் போட்டியில் 57 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவர், 29 ரன்கள் சேர்த்திருந்த போது உலக அரங்கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவாக ஆயிரம் ரன்களை எட்டிய 2-வது வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த மைல்கல் சாதனையை அவர், தனது 9-வது டெஸ்ட் போட்டியில் எட்டியுள்ளார்.

இந்த வகை சாதனையில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் முதலிடத்தில் உள்ளார். அவர், 7 போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்திருந்தார். இந்திய வீரர்களில் சுனில் கவாஸ்கர், சேதேஷ்வர் புஜாரா ஆகியோர் தலா 11 ஆட்டங்களில் ஆயிரம் ரன்களை சேர்த்திருந்தனர். இந்த சாதனையையும் தற்போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.

43-க்கு 7 விக்கெட்கள்... இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 175 ரன்களுக்கு 3 விக்கெட்களை மட்டுமே இழந்து வலுவாகவே இருந்தது. ஆனால் அதன் பின்னர் மேற்கொண்டு 43 ரன்களை சேர்ப்பதற்குள் 7விக்கெட்களை கொத்தாக தாரை வார்த்தது. அந்த அணி 10 விக்கெட்களையும் சுழற்பந்து வீச்சாளர்களிடம் பறிகொடுத்தது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்