‘பந்துவீச்சில் பக்குவம் அடைந்துள்ளேன்’ - இந்திய வீரர் குல்தீப் யாதவ்

By செய்திப்பிரிவு

தரம்சாலா: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளன்று 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் இந்தியாவின் குல்தீப் யாதவ். இந்த சக்ஸஸுக்கு பந்துவீச்சில் தான் பெற்ற பக்குவம்தான் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த தொடரின் கடைசி போட்டி தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியின் முதல் நாளன்று 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார் குல்தீப்.

“நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஏழு ஆண்டுகள் ஆகிறது. இந்த காலகட்டம் மிகவும் சுவாரஸ்யமானது. நான் எனது ஆட்டம் குறித்து புரிதலை இப்போது சிறப்பாக பெற்றுள்ளேன். விக்கெட்டை எப்படி கணித்து ஆடுவது என்பதை அறிந்துள்ளேன். தரம்சாலா விக்கெட் தரமானதாக உள்ளது. ஒரு பந்து வீச்சாளருக்கு பிரதானமே ஃபிட்னஸ்தான்.

நான் அதில் தீவிர கவனம் செலுத்தினேன். அதன் மூலம் நீண்ட ஸ்பெல்களை என்னால் வீச முடிகிறது. அதற்கு நான் என்னை தயார் படுத்திக் கொண்டேன். தொடக்கதில் பந்து வீசுவதில் சிரமம் இருந்தது. நிறைய மாற்றங்களை மேற்கொண்டேன். தொடர்ந்து விளையாடினால் ஆட்டம் குறித்த புரிதலை பெற முடியும். எனது வெற்றிக்கு பக்குவம்தான் காரணம் என கருதுகிறேன்” என குல்தீப் தெரிவித்துள்ளார்.

இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள குல்தீப், 51 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் தனது பேட்டிங் திறன் மூலமாகவும் நெருக்கடியான நேரத்தில் களத்தில் நிலையாக பேட் செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE