உமேஷின் ‘விடாமுயற்சி’ - உள்ளூர் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்து அசத்தல்!

By செய்திப்பிரிவு

நாக்பூர்: கடந்த ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சோபிக்க தவறினார் உமேஷ் யாதவ். அதன் பிறகு அணியில் ஆடும் வாய்ப்பை இழந்த அவர், நடப்பு ரஞ்சி கோப்பை தொடரில் விதர்பா அணியை இறுதிப் போட்டிக்கு தனது அபார செயல்பாட்டின் மூலம் அழைத்து சென்றுள்ளார்.

36 வயதான உமேஷ், இந்திய அணிக்காக இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 170 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். வலது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்தை வெளியே செல்லும் வகையில் வீசுவது, ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதிலும் வல்லவர். நடப்பு ரஞ்சி சீசனில் 7 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.

“இந்திய அணியில் எனது கம்பேக் குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. அது நிர்வாகத்தின் கையில்தான் உள்ளது. அணிக்கு என்ன தேவை, அந்த திறன் எந்த வீரர் வசம் உள்ளது என்பதும் அவர்களுக்குதான் தெரியும். நான் அதிகம் பந்து வீச வீச எனது உடல் ஃபிட்டாக இருக்கும் என கருதுகிறேன். இதோ இந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடி உள்ளேன். இறுதிப் போட்டியில் எங்கள் அணி சிறப்பாக செயல்படும் என கருதுகிறேன். ஒரு அணியாக இந்தப் போட்டியை நாங்கள் எதிர்கொள்ள வேண்டும்.

நான் விக்கெட் வீழத்தாமல், அணியின் சக வீரர் அதை செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே. அது அணிக்கு நலன் சேர்க்கும். ஆடுகளம் சில நேரங்களில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுக்கும், சில நேரங்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுக்கும். அதை அறிந்த நான், எனது லைன் மற்றும் லெந்த்தில் கவனம் செலுத்துவேன். அதன் மூலம் பேட்ஸ்மேனுக்கு அழுத்தம் கொடுப்பேன்” என அவர் தெரிவித்துள்ளார். ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக விதர்பா விளையாடுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE