அஸ்வினின் 100-வது டெஸ்ட் போட்டி | ‘மேட்ச் வின்னர்’ என ரோகித் புகழாரம்

By செய்திப்பிரிவு

தரம்சாலா: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், 100-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். இந்நிலையில், அவரை மனதார புகழ்ந்துள்ளார் கேப்டன் ரோகித் சர்மா.

37 வயதான அஸ்வின் கடந்த 2011 முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். அண்மையில் தான் 500 விக்கெட் சாதனையை படைத்திருந்தார். அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவாக 250, 300 மற்றும் 350 விக்கெட்களை கைப்பற்றிய பவுலராகவும் உள்ளார். இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இங்கிலாந்து அணியுடன் வியாழக்கிழமை அன்று தரம்சாலாவில் நடைபெற உள்ள 5-வது டெஸ்ட் போட்டி அஸ்வினின் 100-வது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது. 26,012 பந்துகளை வீசி உள்ளார். அதன் மூலம் 507 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். 35 முறை ஒரே இன்னிங்ஸில் 5+ விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். பேட்ஸ்மேனாக 3,309 ரன்கள் எடுத்துள்ளார். 5 சதம், 14 அரைசதம் இதில் அடங்கும்.

“அஸ்வின் அபார வீரர். அண்மையில் நடைபெற்ற ராஜ்கோட் போட்டியில் கடினமான சூழலிலும் அணிக்காக விளையாட வந்தவர். இந்த மாதிரியான வீரர்களை பார்ப்பது அரிது. இவர்கள் மூலம் ஒரு அணி வீறு நடை போட முடியும். நூறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது அசாத்திய சாதனை.

இது மிகப்பெரிய மைல்கல். அணியின் மேட்ச் வின்னர்களில் அஸ்வின் பிரதானமானவர். கடந்த 5 முதல் 7 ஆண்டுகளாக அணிக்காக அவர் கொடுத்துள்ள பங்களிப்பு ரொம்பவே அதிகம். அவரிடம் எப்படி பந்து வீச வேண்டும், எந்த ஃபீல்ட் செட் செய்ய வேண்டும் என எதுவும் சொல்ல வேண்டியதில்லை. அவரிடம் பந்தை கொடுத்தால் சிறப்பாக செயல்படுவார். சிறந்த திறன் கொண்டவர்” என ரோகித் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE