மும்பையில் நடந்து முடிந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் மும்பை அணியிடம் தமிழ்நாடு அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது குறித்து சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. அதாவது தமிழ்நாடு அணி கேப்டன் சாய் கிஷோர் எடுத்த ஒரு முடிவுதான் இத்தகைய படுதோல்விக்குக் காரணம் என்று தமிழ்நாடு அணியின் பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி கேப்டன் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டு விமர்சனம் செய்ததுதான் பிரச்சனையாகியுள்ளது.
ஷர்துல் தாக்கூரின் அபாரமான முதல் இன்னிங்ஸ் அதிரடி சதத்தினாலும், பிற்பாடு அவரே தமிழ்நாடு அணியின் 2வது இன்னிங்சில் சாய் சுதர்ஷன் மற்றும் நாராயண் ஜெகதீசனை பெவிலியனுக்கு அனுப்பியதாலும் தமிழ்நாடு அணியின் சரிவுக்கும் காரணமாக இருந்தார். ஷர்துல் தாக்கூர் மட்டுமல்லாது கடைசி விக்கெட்டுக்காக இரு வீரர்களும் சாதனை படைத்த தனுஷ் கோடியன் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் மீண்டும் 88 ரன்களைச் சேர்த்தனர். இதில் தனுஷ் கோடியன் மீண்டும் ஒரு சதமெடுக்கும் வாய்ப்பு உண்டானது. ஆனால் வாஷிங்டன் சுந்தர், துஷார் தேஷ்பாண்டேயை வீழ்த்த 89 ரன்களில் கோடியன் நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
சாய் கிஷோர் கேப்டன்சியில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரஞ்சி அரையிறுதியை தமிழ்நாடு அணி எட்டியது ஒரு பெரிய விஷயம் என்றாலும், மும்பையைச் சேர்ந்த பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி பிட்சைப் பார்த்து விட்டு டாஸ் வென்றால் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்வோம், ஏனெனில் பிட்ச் சீம் பவுலிங்கிற்குச் சாதகமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். அனைவரும் இதை ஏற்றுக் கொண்டுவிட்டனர். ஆனால் டாஸ் வென்ற கேப்டன் சாய் கிஷோர் டாஸில் ஜெயித்தவுடன் அனைவரும் அதிர்ச்சியடையும் விதமாக பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இது தொடர்பாக குல்கர்னி கூறியதாவது: “டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்திருக்க வேண்டும். ஆனால் கேப்டனுக்கு வேறு சிந்தனை. நான் எப்போதும் வெளிப்படையாகப் பேசுபவன். முதல் நாள் ஆட்டத்தில் காலை 9 மணிக்கு டாஸிலேயே ஆட்டத்தையே தோற்று விட்டோம். பிட்சைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்குப் புரிந்து விட்டது, நமக்கு என்ன கிடைக்கப் போகிறது என்பது. முதலில் பீல்டிங் செய்வதற்கான அனைத்தும் சரியாக திட்டமிடப்பட்டிருந்தன.
» இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் | தகுதி சுற்றில் சுமித் நாகல் வெற்றி
» பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் தொடர் | 2-வது சுற்றில் சாட்விக்-ஷிராக் ஜோடி
பயிற்சியாளராக மும்பைவாசியாக எனக்கு பிட்ச் நிலவரங்கள் நன்றாகவே தெரியும். நாங்கள் முதலில் பவுலிங் செய்திருக்க வேண்டும். ஆனால் கேப்டனுக்கு வேறு சிந்தனை. காலிறுதிக்கு வேறு ஒரு பிட்சை தயார் செய்தார்கள். ஆனால் அரையிறுதிக்கு ஸ்விங் பவுலிங்குக்குச் சாதகமாக அமைத்திருந்தார்கள். எனவே இது கடினமான மேட்ச் என்பது புரிந்து விட்டது. நன்றாக ஆடினாலே ஒழிய வெற்றி பெற முடியாது. ஆனால் சாய் கிஷோர்தான் கேப்டன். நான் அவருக்கு பிட்ச் பற்றியும் மும்பை அணியின் மனநிலை பற்றியும் ஆலோசனைகள் வழங்கலாம் அவ்வளவே.
யார் டாஸ் வென்றாலும் முதலில் பவுலிங் செய்வார்கள் என்பது முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டு உறுதியானது. நாமும் பவுலிங்தான் செய்வோம் என்ற மனநிலைக்கு அனைவரும் தயாராகி விட்ட போது திடீரென பேட்டிங் என்று முடிவெடுத்தது எப்படி சரியாகும். பேட்டிங் செய்து உங்கள் சர்வதேச வீரர் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். சூழ்நிலையை நீங்கள் பார்க்க வேண்டும். முதல் ஒரு மணி நேரத்திலேயே ஆட்டத்தில் தோல்வி அடைந்து விட்டோம். அங்கிருந்து மீள முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
குல்கர்னி பேச்சில் கேப்டனை பெயர் சொல்லி வெளிப்படையாக மக்கள் பார்வைபட விமர்சித்தது தவறு என்கிறார் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக். அதாவது "7 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அணியை ரஞ்சி அரையிறுதிக்குக் கூட்டி வந்த சாய் கிஷோரை ஆதரிப்பதை விடுத்து பகிரங்கமாக விமர்சித்துள்ளார் சுலக்ஷன் குல்கர்னி, இது தவறு. அணியையும் கேப்டனையும் கவிழ்த்து விட்டார் கோச்" என்று சாடியுள்ளார்.
ஆனால் இந்த இரண்டு நிலைப்பாடுகளிலும் நம் கேள்வி என்னவெனில் பகிரங்கமாகக் கூறினால் என்ன தவறு?. என்ன தவறு நடந்தது என்பது கேப்டன், அணி வீரர்கள், கோச் ஆகியோரிடையே மட்டும் சுற்றும் ரகசியமா என்ன?. ரசிகர்களுக்குத் தெரிய வேண்டாமா என்ன நடந்தது என்று. ஆகவே சுலக்ஷன் குல்கர்னி வெளிப்படையாகக் கூறியது சரிதான் என்றே கூற வேண்டும்.
1996 உலகக் கோப்பை நினைவிருக்கலாம். இலங்கைக்கு எதிரான அரையிறுதியில் பிட்ச் இரவு ஸ்பின்னர்களுக்குச் சாதகமாகப் பயங்கரமாகத் திரும்பும் என்று ஊடகங்கள் முதல் பண்டிதர்கள் வரை தெரிவித்து அது பரவிய நிலையில் கேப்டன் அசாருதீன் டாஸ் வென்று அனைவரும் அதிர்ச்சியடையும் படியாக பீல்டிங்கைத் தேர்வு செய்து அந்தப் போட்டியில் இந்தியா 120/8 என்று ஆகி ரசிகர்கள் ரகளையில் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிந்தது.
இறுதிக்கு இலங்கை அணி முன்னேறியது. அப்போது அணி நிர்வாகம் முதலில் பேட்டிங்தான் என்று முடிவெடுத்த பிறகு அசார் டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தது புரியாத புதிர், கடும் அதிர்ச்சி என்று அப்போது வெளிப்படையாகத்தான் கேப்டன் அணி நிர்வாகத்தினரால் சாடப்பட்டார். ஆகவே ரகசியக் காப்புப் பிரமாணமெல்லாம் தேவையில்லை. வெளிப்படைத்தன்மைதான் தேவை. இதில் தினேஷ் கார்த்திக் கூறும் ‘கேப்டனை ஆதரிக்க வேண்டும்’ என்பது சரி, ஆனால் அதற்காக விமர்சனமின்றி ஆதரவு அளிக்க வேண்டும் என்பது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல வாழ்வின் எந்த ஒரு புலத்திலும் வளர்ச்சிக்கு உதவாது.
மேலும் மும்பை முதல் இன்னிங்ஸில் 105 ஓவர்கள் ஆடி 378 ரன்களை எடுத்துள்ளனர். இதில் சீனியர் ஆஃப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தருக்கு 7.5 ஓவர்களே கேப்டன் சாய் கிஷோரினால் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்விங் ஆட்டக்களமாயிற்றே? என்று கேட்பவர்களுக்கு நாம் கூற வருவது என்னவெனில் இடது கை ஸ்பின்னருமாகிய கேப்டன் சாய் கிஷோர் 38 ஓவர்கள் வீசி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் என்பதையே.
கேப்டன் அதிக ஓவர்களை வீசுவது முன்னின்று வழிநடத்துவது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் கூட வாஷிங்டன் சுந்தருக்கு வெறும் 7.5 ஓவர்கள்தானா என்ற கேள்வி எழுகிறது. 106/7 என்ற நிலையிலிருந்து மும்பையை 378 ரன்கள் அடிக்கவிட்டது எப்படி?. இதற்கான காரணம் என்ன என்பதையும் ஆராய வேண்டியுள்ளதோடு, கேப்டன்சியில் சாய் கிஷோர் எங்கு தவறிழைத்தார் என்பதையும் வெளிப்படையாக பேச வேண்டும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago