பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலக தரவரிசை அடிப்படையில் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர் மற்றும் மகளிர்டேபிள் டென்னிஸ் அணிகள்தகுதி பெற்று வரலாற்று சாதனைபடைத்துள்ளன.

தென் கொரியாவின் புசான் நகரில் கடந்த மாதம் டேபிள் டென்னிஸ் உலக அணிகள் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இது வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான கடைசி தகுதி சுற்று போட்டியாக அமைந்திருந்தது. இந்த தொடர் முடிவடைந்த நிலையில் அணிகள் பிரிவில் 7 இடங்கள் எஞ்சியிருந்தன. இவை தற்போது தரவரிசையின் அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் மகளிர் அணிகள் பிரிவில் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள இந்தியா, 12-வது இடத்தில் உள்ள போலந்து,15-வது இடத்தில் உள்ள சுவீடன் மற்றும் தாய்லாந்து ஆகிய 4 அணிகளும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடவர் பிரிவில் உலகத் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள குரோஷியா, 15-வது இடத்தில் உள்ள இந்தியா, 11-வது இடத்தில் உள்ள ஸ்லோவேனியா ஆகிய 3 அணிகளும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளன.

இந்திய டேபிள் டென்னிஸ் வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது. 2008-ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில்தான் முதன்முறையாக டேபிள்டென்னிஸ் அணிகள் போட்டி அறிமுகம் ஆனது. இந்த பிரிவில் இந்திய அணிகள் முதன்முறையாக விளையாட தற்போதுதான் தகுதி பெற்றுள்ளது.

இந்திய டேபிள் டென்னிஸ் நட்சத்திரமான சரத் கமல் தனது எக்ஸ் வலைதள பதிவில், “இறுதியாக ஒலிம்பிக்கில் குழுப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது இந்தியா. நீண்டநாட்களாக நான் விரும்பிய விஷயம் இது.

5-வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளேன் என்ற போதிலும், இது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. வரலாற்று சிறப்புமிக்க வகையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய மகளிர் அணிக்கும் பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE