தமிழகத்துக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி: 48-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி மும்பை அணி அசத்தல்

By செய்திப்பிரிவு

மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் தமிழக அணியை இன்னிங்ஸை மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மும்பை அணி.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் தமிழகம் - மும்பை அணிகள் இடையிலான ஆட்டம் மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய மும்பை அணி 2-வதுநாள் ஆட்டத்தில் 100 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 353 ரன்கள் எடுத்தது. தனுஷ் கோட்டியன் 74, துஷார் தேஷ்பாண்டே 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய மும்பை அணி 106.5 ஓவர்களில் 378 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. துஷார் தேஷ்பாண்டே 27 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஆட்டமிழந்தார். தனுஷ் கோட்டியன் 89 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தமிழக அணி தரப்பில் சாய்கிஷோர் 6, குல்தீப் சென் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

232 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தமிழக அணி 51.5 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 105 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் சேர்த்தார். சாய் சுதர்சன் 5, நாராயண் ஜெகதீசன் 0, வாஷிங்டன் சுந்தர் 4, பிரதோஷ் ரஞ்ஜன் பால் 25, விஜய் சங்கர் 24, சாய் கிஷோர் 21, முகமது 0,அஜித் ராம் 4, சந்தீப் வாரியர் 0 ரன்களில் நடையை கட்டினர்.

மும்பை அணி தரப்பில் ஷம்ஸ் முலானி 4 விக்கெட்கள் வீழ்த்தினார். ஷர்துல் தாக்குர், மோஹித் அஸ்வதி, தனுஷ் கோட்டியன் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக ஷர்துல் தாக்குர் தேர்வானார். அவர், முதல் இன்னிங்ஸில் 109 ரன்கள் விளாசியிருந்தார். பந்து வீச்சில் இரு இன்னிங்ஸிலும் கூட்டாக 4 விக்கெட்ளை கைப்பற்றினார். இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மும்பைஅணி இறுதிப் போட்டியில் கால்பதிப்பது இது 48-வது முறையாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE