ரூ.40 லட்சம் முதல் ரூ.1.48 கோடி வரை - கோடிகளில் இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி டிக்கெட் விற்பனை

By செய்திப்பிரிவு

நியூயார்க்: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியின் டிக்கெட்டுகள் கோடிகளில் விற்பனையாகி வருகிறது.

அமெரிக்காவில் வரும் ஜூன் 9-ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் இடையே டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விலை அதிகபட்சமாக ரூ.1.48 கோடி வரை விற்பனை ஆவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பொதுவாகவே இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவர். சமீப ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையே இருதரப்பு போட்டிகள் அரசியல் காரணங்களால் நடைபெறாமல் இருப்பதால் பெரிய தொடர்களில் இரு அணிகளும் மோதும்போது பெரிய அளவுக்கு ‘ஹைப்’ உண்டாகிறது.

வார்த்தைகளில் மட்டும் இல்லாமல், தற்போது விலையிலும் ஹைப் ஏற்றப்பட்டுள்ளது. ஜூன் 9-ஆம் தேதி நியூயார்க்கில் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான சாதாரண இருக்கைக்கான டிக்கெட்டின் விலை அமெரிக்க மதிப்பில் $6 (ரூ.497). அதுவே பிரீமியம் இருக்கைக்கான டிக்கெட்டின் விலை $400 (ரூ.33,148). இந்த விலையுடன் வரி பிடித்தமும் செய்யப்படும். இதுவே போட்டி நடைபெறும் மைதானத்தில் பிரீமியம் இருக்கைக்கான டிக்கெட் விலையே அதிகம்.

ஆனால், அதிகாரபூர்வ டிக்கெட் விற்பனை தளத்தில் இருந்து 400 டாலருக்கு விற்கப்படும் டிக்கெட்டை வாங்கி மறுவிற்பனை செய்யும் தளங்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் பிரீமியம் டிக்கெட்டின் விலை $50,000-ல் தொடங்கி $175,000 வரை விற்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.40 லட்சத்தில் தொடங்கி அதிகபட்சமாக ரூ.1.48 கோடி வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதன் கூடவே, பிளாட்ஃபார்ம் கட்டணங்கள் மற்றும் கூடுதல் கட்டணங்களைச் சேர்த்தால், சுமார் ரூ.1.86 கோடி வரை டிக்கெட் விற்பனை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் பிரபலமாக விளையாடப்பட்டு வரும் என்பிஏ (NBA) போட்டிகளுக்கு இதேபோல் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை நடக்கும். எனினும், என்பிஏ இறுதிப் போட்டிக்கே $24,000 வரை மட்டுமே டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது. ஆனால், அதைவிட பன்மடங்கு இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்கு டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE