“ரஜத் படிதாரை நீக்கிவிடாதீர்கள்... வாய்ப்பு கொடுங்கள்!” - ஏ.பி.டிவில்லியர்ஸ்

By ஆர்.முத்துக்குமார்

தரம்சலா: தரம்சலாவில் நடைபெறவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் ரஜத் படிதாருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அவருக்கு இன்னும் சில வாய்ப்புகள் வழங்கிய பிறகே முடிவுக்கு வர வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க லெஜண்ட், 360 டிகிரி பேட்டர் ஏ.பி.டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக கோலி ஆடவில்லை என்பதால் வாய்ப்பு பெற்ற ரஜத் படிதார், உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் குறிப்பாக ரஞ்சி போட்டிகளில் எக்கச்சக்கமாக ரன்களைக் குவித்ததையடுத்து வாய்ப்பு பெற்றார். ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் அவர் மொத்தமே 63 ரன்களை 10.5 என்ற சராசரியில் எடுக்க, அணியில் அவரது இடம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

கிரிக்கெட் வல்லுநர்களும் விஷயமறியா சமூக ஊடக ட்ரோல் படையும் ரஜத் படிதாரை நீக்க வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர். இந்திய அணி ஏற்கெனவே 3-1 என்று டெஸ்ட் தொடரை வென்றுள்ள நிலையில் 5வது டெஸ்ட் போட்டியில் தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் இடத்தில் இறக்கப்படுவார் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனும், 360 டிகிரி வீரர் என அழைக்கப்படுபவருமான ஏ.பி.டிவில்லியர்ஸ் இது தொடர்பாகக் கூறியதாவது: ரஜத் படிதாருக்கு இந்த தொடர் வாழ்க்கையின் நினைவில் கொள்ள விரும்பத் தகாத தொடராகியுள்ளது. ஆனால் இந்திய அணியின் பெரிய விஷயம் என்னவெனில் மற்றவர்கள் அபாரமான ஆட்டத்தை ஆடி அணிக்கு வெற்றி தேடித் தரும் நிலையில் ரஜத் படிதார் தோல்வியடைந்தாலும் அணியில் நீடிக்க வாய்ப்பு உள்ளது.

அவரது குணாதிசியமும் அணுகுமுறையும் ஈர்க்கக் கூடியதாக இருந்தால், ஓய்வறையில் படிதாரை அனைவருக்கும் பிடித்திருந்தால் ரோகித் சர்மாவும் அணித் தேர்வுக்குழுவும் நிச்சயம் ‘படிதார் எதிர்கால இந்திய அணிக்குத் தேவை, அணியின் ஒரு அங்கமாக அவரை பார்க்கிறோம்’ என்று அவரைத் தக்க வைக்க வாய்ப்புள்ளது. அவர் ரன்களை உடனடியாக எடுக்கவில்லை என்றாலும் இன்னும் கொஞ்சம் வாய்ப்புகளை அளிப்போம்’ என்று கருத இடமுண்டு.

இந்திய அணியில் இளம் வீரர்கள் நன்றாக ஆடுவது அந்த அணிக்கு மிக நல்லது. இது இந்திய அணியில் நல்ல சூழல் நிலவுவதை எடுத்துக் காட்டுகிறது. ஒவ்வொரு முறையும் இளம் வீரர் அணிக்குள் நுழைந்து அணியின் தேவைகளுக்கு ஏற்ப ஆடுவது என்பது நல்ல சூழ்நிலை இருந்தால்தான் நடக்கும். இவ்வாறு கூறினார்.

மார்ச் 7ம் தேதி தரம்சலாவில் கடைசி டெஸ்ட் தொடங்குகிறது. தொடரை இந்திய அணி ஏற்கெனவே வென்றாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான 12 புள்ளிகளைப் பெற இரு அணிகளும் மோதும். எனவே கடைசி டெஸ்ட் சம்பிரதாய இறுதி டெஸ்ட் போட்டியாக இருக்காது என்பது உறுதி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE