AFG vs IRE | டெஸ்ட் கிரிக்கெட்டில் அயர்லாந்துக்கு முதல் வெற்றி

By செய்திப்பிரிவு

அபுதாபி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை அயர்லாந்து அணி வென்றது.

ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் இடையிலான ஒரே ஒரு ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடர் அபுதாபியில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் 155 ரன்களும், அயர்லாந்து 263 ரன்களும் எடுத்தன. 108 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆப்கானிஸ்தான் நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 75.4 ஓவர்களில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி 55, ரஹ்மனுல்லா குர்பாஸ் 46 ரன்கள் சேர்த்தனர். அயர்லாந்து அணி தரப்பில் கிரெய்க் யங், மார்க் அடேர், பார்ரி மெக்கார்தி ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து 111 ரன்கள் இலக்குடன் பேட் செய்த அயர்லாந்து அணி 31.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கேப்டன் ஆண்டி பால்பிர்னி 58, லார்கன் டக்கர் 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக பீட்டர் மூர் 0, கர்திஸ் கேம்பர் 0, ஹாரி டக்டர் 2, பால் ஸ்டிர்லிங் 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி அயர்லாந்து அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அயர்லாந்து அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. அந்த அணி இதற்கு முன்னர் விளையாடிய 7 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியை சந்தித்திருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE