‘உள்ளூர் கிரிக்கெட் விவகாரத்தில் பிசிசிஐ முடிவை வரவேற்கிறேன்’ - கபில் தேவ்

By செய்திப்பிரிவு

மும்பை: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கான வீரர்களின் ஆண்டு ஒப்பந்தத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத சமயங்களில் உள்ளூர் கிரிக்கெட்டில் வீரர்கள் விளையாட வேண்டும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்த முடிவை தான் வரவேற்பதாக தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்.

அண்மையில் வெளியான வீரர்களுக்கான ஆண்டு ஒப்பந்தத்தில் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் நீக்கப்பட்டனர். உள்ளூர் கிரிக்கெட்டில் தங்களது மாநில அணிக்காக அவர்கள் விளையாட மறுத்தது இதற்கு காரணமாக சொல்லப்பட்டது. இந்த முடிவை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள் மற்றும் வல்லுநர்கள் ஆதரித்தும், விமர்சித்தும் இருந்தனர்.

“தேசத்தை விட யாரும் பெரியவர்கள் அல்ல என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. பிசிசிஐ-யின் இந்த முடிவு சில வீரர்களுக்கு இம்சை கொடுக்கலாம். இந்த முடிவின் மூலம் உள்ளூர் கிரிக்கெட்டை பிசிசிஐ காத்துள்ளது. சரியான நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிச்சயம் உள்ளூர் கிரிக்கெட்டை மீட்டெடுக்கும் பாதையில் இது வலுவானதொரு நடவடிக்கை.

சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட தயாராக இருக்க வேண்டும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். அதனால் இதனை வரவேற்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE