ராஞ்சி: ராஞ்சி டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது இந்தியா.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கடந்த 23-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து நேற்று காலை 3-ம் நாள் ஆட்டத்தை இந்திய வீரர் துருவ் ஜுரெல் 30 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 17 ரன்களுடனும் தொடங்கினர்.
குல்தீப் யாதவ் 28 ரன்கள் எடுத்த நிலையில், ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் போல்டானார். இதைத் தொடர்ந்து விளையாட வந்த ஆகாஷ் தீப் 9 ரன்கள் சேர்த்த நிலையில், ஷோயிப் பஷிர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
ஆனால் மறுமுனையில் அபாரமாக விளையாடிய துருவ் ஜுரெல் அரை சதம் கடந்தார். அவர் சதத்தை நெருங்கிய வேளையில் துரதிருஷ்டவசமாக 90 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை டாம் ஹார்ட்லி வீழ்த்தினார். அவரது ஸ்கோரில் 6 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். இதையடுத்து இந்திய அணி 103.2 ஓவர்களில் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஷோயிப் பஷிர் 5 விக்கெட்களையும், டாம் ஹார்ட்லி 3 விக்கெட்களையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்களையும் சாய்த்தனர்.
» “ரகசியமாக அவனை கிரிக்கெட் ஆட அனுப்புவேன்” - ஆகாஷ் தீப் தாயார் உருக்கம்
» “இந்த பிட்சில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” - பஷீர் சொல்லும் வெற்றி வாய்ப்புகள்
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 46 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் 2-வது இன்னிங்ஸை இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜடேஜாவின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி நிலைகுலைந்தது. பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட் ஆகியோரது விக்கெட்களை அஸ்வின் வீழ்த்தி அந்த அணிக்கு அதிர்ச்சியை அளித்தார்.
அந்த அணியில் ஜாக் கிராவ்லி மட்டுமே நிலைத்து நின்று விளையாடினார். அவர் 60 ரன்கள் சேர்த்த நிலையில், குல்தீப் யாதவ் பந்தில் போல்டானார். இதைத் தொடர்ந்து ஜானி பேர்ஸ்டோவின் விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார். பேர்ஸ்டோ 30 ரன்கள் சேர்த்தார்.
பென் ஸ்டோக்ஸ் 4, டாம் ஹார்ட்லி 7, ஆலி ராபின்சன் 0 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவின் அபார பந்துவீச்சில் வீழ்ந்தனர். கடைசியாக பென் போக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரது விக்கெட்களை அஸ்வின் கைப்பற்றினார்.
இதனால் 53.5 ஓவர்களில் 145 ரன்களுக்கு இங்கிலாந்தின் 2-வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்களைக் கைப்பற்றி இங்கிலாந்து அணியின் சரிவுக்குக் காரணமானார். குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2-வது இன்னிங்ஸை விளையாடியது. 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 24 ரன்களுடனும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 16 ரன்களுடனும் இன்று நான்காவது நாளை தொடர்ந்தனர். மேலும் பொறுப்பாக விளையாடியது இக்கூட்டணி. 37 ரன்கள் எடுத்திருந்த ஜெய்ஸ்வால் அடித்த பந்தை அசாத்தியமாக கேட்சாக பிடித்து ஆண்டர்சன் அவரை ஆட்டமிழக்க வைத்தார். ரூட் பந்தில் முதல் விக்கெட்டானர் ஜெய்ஸ்வால். மறுபக்கம் ரோஹித் சர்மா நிதானத்துடன் விளையாடி அரைசதம் கடந்தார். எனினும் அவர் ரோஹித் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.
ரோஹித் 55 ரன்களில் அவுட் ஆக, ரஜத் படிதார் 0, ஜடேஜா 4 ரன்கள், சர்ஃப்ராஸ் கான் 0 என அடுத்தடுத்து இந்திய அணி விக்கெட்களை இழந்தது. எனினும், ஒன் டவுன் இறங்கிய ஷுப்மன் கில், அறிமுக வீரர் துருவ் ஜூரெல் உடன் இணைந்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு நோக்கி அழைத்து சென்றார். இருவரும் பொறுப்பாக விளையாடி பவுண்டரிகளை விரட்டி வெற்றியைத் தேடித்தந்தனர். 61 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ஷுப்மன் கில் 52 ரன்கள், துருவ் ஜூரெல் 39 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினர். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஷோயிப் பஷிர் 3 விக்கெட் வீழ்த்தினார். நடப்பு டெஸ்ட் தொடரில் இந்தியா பெறும் மூன்றாவது வெற்றி இதுவாகும். இதன்மூலம் 5 போட்டிகள் டெஸ்ட் தொடரை 3 - 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago