IND vs ENG ராஞ்சி டெஸ்ட் | இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்கு: அஸ்வின், குல்தீப் அபார பந்துவீச்சு

By செய்திப்பிரிவு

ராஞ்சி: இங்கிலாந்து அணிக்கெதிரான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் 2-வது இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ் ஆகியோரின் அபார பந்துவீச்சால் அந்த அணி 145 ரன்களுக்குச் சுருண்டது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கடந்த 23-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து நேற்று காலை 3-ம் நாள் ஆட்டத்தை இந்திய வீரர் துருவ் ஜுரெல் 30 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 17 ரன்களுடனும் தொடங்கினர்.

குல்தீப் யாதவ் 28 ரன்கள் எடுத்த நிலையில், ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் போல்டானார். இதைத் தொடர்ந்து விளையாட வந்த ஆகாஷ் தீப் 9 ரன்கள் சேர்த்த நிலையில், ஷோயிப் பஷிர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

ஆனால் மறுமுனையில் அபாரமாக விளையாடிய துருவ் ஜுரெல் அரை சதம் கடந்தார். அவர் சதத்தை நெருங்கிய வேளையில் துரதிருஷ்டவசமாக 90 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை டாம் ஹார்ட்லி வீழ்த்தினார். அவரது ஸ்கோரில் 6 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். இதையடுத்து இந்திய அணி 103.2 ஓவர்களில் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஷோயிப் பஷிர் 5 விக்கெட்களையும், டாம் ஹார்ட்லி 3 விக்கெட்களையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்களையும் சாய்த்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 46 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் 2-வது இன்னிங்ஸை இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜடேஜாவின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி நிலைகுலைந்தது. பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட் ஆகியோரது விக்கெட்களை அஸ்வின் வீழ்த்தி அந்த அணிக்கு அதிர்ச்சியை அளித்தார்.

அந்த அணியில் ஜாக் கிராவ்லி மட்டுமே நிலைத்து நின்று விளையாடினார். அவர் 60 ரன்கள் சேர்த்த நிலையில், குல்தீப் யாதவ் பந்தில் போல்டானார். இதைத் தொடர்ந்து ஜானி பேர்ஸ்டோவின் விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார். பேர்ஸ்டோ 30 ரன்கள் சேர்த்தார்.

பென் ஸ்டோக்ஸ் 4, டாம் ஹார்ட்லி 7, ஆலி ராபின்சன் 0 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவின் அபார பந்துவீச்சில் வீழ்ந்தனர். கடைசியாக பென் போக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரது விக்கெட்களை அஸ்வின் கைப்பற்றினார்.

இதனால் 53.5 ஓவர்களில் 145 ரன்களுக்கு இங்கிலாந்தின் 2-வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்களைக் கைப்பற்றி இங்கிலாந்து அணியின் சரிவுக்குக் காரணமானார். குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2-வது இன்னிங்ஸை விளையாடியது. 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் ரோஹித் சர்மா 24 ரன்களுடனும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 3-ம் நாள்ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது.

கைவசம் 10 விக்கெட்கள் இருக்கும் நிலையில் இந்திய அணி இன்று தொடர்ந்து விளையாடவுள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 152 ரன்கள் மட்டுமே தேவை.

இந்திய மண்ணில் அதிக விக்கெட்கள்: இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை ரவிசந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய மண்ணில் 354 டெஸ்ட் விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றியுள்ளனர். இதுவரை இந்திய மண்ணில், இந்திய வீரர்கள் அனில் கும்ப்ளே 350 விக்கெட்களும் ஹர்பஜன் சிங் 265 விக்கெட்களும், கபில் தேவ் 219 விக்கெட்களும், ரவீந்திர ஜடேஜா 211 விக்கெட்களும் எடுத்துள்ளனர். இதன்மூலம் இந்திய மண்ணில் 350 விக்கெட்கள் எடுத்திருந்த அனில் கும்ப்ளேவின் சாதனையை அஸ்வின் முறியடித்துள்ளார்.

அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்